மலேசியா, சிங்கப்பூர் இருநாட்டு அவசரகால பயிற்சி நடவடிக்கை இன்று நடக்கவுள்ளது. இதன் காரணமாக துவாஸ் இணைப்புப் பாலத்தின் இரு தடங்கள் மூடப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து அங்கு வாகன நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மலேசியாவுக்கு அவசியமான பயணமாக இருந்தாலன்றி அங்கு செல்வதை ஒத்திப்போடுமாறு வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இது குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்ட குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் இந்தப் பயிற்சி நடவடிக்கை தேசிய சுற்றுப்புற வாரியம், மலேசிய சுற்றுப்புற அமைப்பு மற்றும் வேறு பல அமைப்புகள் கலந்துகொள்ளும் என்று கூறுகிறது.
இந்தப் பயிற்சி நடவடிக்கை காலை 6.00 மணிக்கும் மதியம் 2.00 மணிக்கும் இடையே நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி நடவடிக்கை ரசாயனப் பொருள்களை ஏந்திச் செல்லும் லாரி, மற்ற வாகனங்களுடன் விபத்தில் ஈடுபடுவது போன்ற பாவனைப் பயிற்சி. இதனால், சாலையில் ரசாயனப் பொருள்கள் சிதறியது போன்ற அவசரகாலநிலைப் பயிற்சியாக இது விளங்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பயிற்சி நடவடிக்கையால் துவாஸ் இணைப்பில் இரண்டு தடங்கள் மட்டுமே செயல்படும். ஒன்று சிங்கப்பூரிலிருந்து செல்லும் வாகனமோட்டிகளுக்கும் மற்றொன்று சிங்கப்பூருக்குள் வரும் வாகனமோட்டிகளுக்கும் திறந்திருக்கும். மற்ற அனைத்துத் தடங்களும் மூடப்பட்டிருக்கும்.
இதன் காரணமாக மாற்றுப் பாதையைப் பயன்படுத்தும்படி வாகனமோட்டிகள் அறிவுறுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாகனமோட்டிகள் போக்குவரத்து காவல்துறையினரின் வழிகாட்டுதலை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் கூடுதல் வளங்களை அங்கு பயன்படுத்தும். அதனால், வாகனமோட்டிகள் இதை எல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு தங்கள் பயணத்தை அதற்கேற்றவாறு திட்டமிட்டு கூடுதல் காத்திருப்பு நேரத்துக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.