பணவீக்க விகிதத்திற்குமேல் முதலீட்டு நிறுவனத்திற்கு லாபம்

2 mins read
65dbe0ee-d538-49a3-ab6a-4803149a5fa2
சொத்துச் சந்தை, உள்கட்டமைப்பு போன்ற நீண்டகால லாபம் தரும் அம்சங்களில் முதலீட்டை இரட்டிப்பாக்கத் திட்டமிடுவதாக ‘ஜிஐசி’ கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’, எட்டு ஆண்டுகளில் ஆக அதிக லாபம் ஈட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்றதன்மை, கடுமையான பணவீக்கம் ஆகியவை தொடரும் நிலையில் சவால்கள் அதிகமிருந்தாலும் ஜிஐசி மீள்திறனுடன் லாபம் கண்டுள்ளது.

சிங்கப்பூரின் காப்புநிதிக்குப் பங்களிக்கக்கூடிய மூன்று அமைப்புகளில் ஜிஐசியும் ஒன்று.

நீடித்த நிலைத்தன்மைத் துறையில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளப்போவதாக அது கூறியது. இருப்பினும், சொத்துச் சந்தை, உள்கட்டமைப்பு போன்ற நிலையான, நீண்டகால அடிப்படையில் லாபம் தரக்கூடிய அம்சங்களில் முதலீட்டை இரட்டிப்பாக்க இருப்பதாக ஜிஐசி குறிப்பிட்டது.

மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற 20 ஆண்டுக் காலகட்டத்தில் 4.6 விழுக்காடு லாபம் ஈட்டியதாக புதன்கிழமை ஜிஐசி தெரிவித்தது.

அதாவது 2003ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் வரை, ஜிஐசி நிறுவனத்தின் சராசரி வருடாந்தர லாப விகிதம் 4.6 விழுக்காடு. அது உலகளாவிய பணவீக்க விகிதத்தைக் காட்டிலும் அதிகம்.

சென்ற நிதியாண்டில் அது 4.2 விழுக்காடாகப் பதிவானது.

பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வண்ணம் மீள்திறனை உயர்த்துவதற்கு ஜிஐசி முன்னுரிமை தருவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் சாவ் கியட் கூறினார்.

உள்கட்டமைப்புத் துறை பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படாத ஒன்று என ஜிஐசியின் தலைமை முதலீட்டு அதிகாரி டாக்டர் ஜெஃப்ரி ஜேன்சுபாகிஜ் கூறினார்.

பணவீக்கம் அதிகரித்தாலும்கூட வாடகை உள்ளிட்ட வகையில் அதில் வருவாய் ஈட்ட இயலும் என்பதை டாக்டர் ஜெஃப்ரி சுட்டினார்.

ஜிஐசியின் நிலையான லாபம் சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட செலவினத்திற்குப் பெரிதும் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்