புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவாவிற்கு மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஏழு வாரங்களுக்கு அவருக்கு அன்றாடம் கதிரியக்க சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
59 வயதாகும் திரு லியாங் புதன்கிழமை ஃபேஸ்புக்கில் அதுகுறித்துப் பதிவிட்டார்.
கடந்த சில மாதங்களாகத் தமக்கு இடது காதில் கேட்கும் திறன் குறைந்ததால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரைத் தாம் நாடியதாக அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மூலம் திரு லியாங்கிற்குப் புற்றுநோய் ஆரம்பநிலையில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
“கதிரியக்க சிகிச்சைக்குப் பின்விளைவுகள் ஏற்படக்கூடும் எனக் கருதப்படுவதால், அடுத்த சில மாதங்களுக்கு சில சமூக நடவடிக்கைகள், நாடாளுமன்ற உறுப்பினருக்கான கடமைகளை நான் ஆற்ற இயலாது,” என்று திரு லியாங் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், திரு எட்வர்ட் சியா இருவரும் தமக்குப் பதில் அந்தப் பொறுப்புகளை கவனிப்பர் என்று குடியிருப்பாளர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
“குடியிருப்பாளர் சேவை, சமூகத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றில் புக்கிட் பாஞ்சாங் அடித்தளத் தலைவர்கள் குழுவும் கூடுதல் கவனம் செலுத்தும்,” என்று திரு லியாங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த சில மாதங்கள் சிகிச்சை எடுக்கும்போது தம்மால் இயன்ற அளவு கடமைகளை ஆற்றவிருப்பதாகக் கூறிய அவர், விரைவில் மீண்டும் முழு வீச்சில் செயல்படும் நாளை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.