சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு சாதனை அளவாக 29,389 திருமணங்கள் பதிவாகியுள்ளன. சிங்கப்பூரில் திருமணம் குறித்த தரவுகளை வெளியிடும் நடவடிக்கை 1961ஆம் ஆண்டு தொடங்கியது. அதுமுதல் பதிவான ஆக அதிக எண்ணிக்கை அது.
ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டைவிட அந்த எண்ணிக்கை 3.7 விழுக்காடு அதிகம். 2021ல் 28,329 திருமணங்கள் பதிவாயின.
2022ஆம் ஆண்டுக்கான திருமணங்கள், மணமுறிவுகள் தொடர்பான தகவல்களை புள்ளிவிவரத் துறை புதன்கிழமை வெளியிட்டது.
2022ல் குறைவான மணமுறிவுகளே பதிவாயின. மொத்தம் 7,107 இணையர் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டனர். இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டைவிட 9.9 விழுக்காடு குறைவு.
சிங்கப்பூரர்கள் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. இது, கருவள விகிதம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பாதிக்கிறது.
2022ல் முதல்முறை திருமணம் செய்த ஆண்களின் சராசரி வயது 30.7ஆகப் பதிவானது. பத்து ஆண்டுகளுக்குமுன் அது 30.1ஆக இருந்தது.
மணமகள்களின் சராசரி வயது 2022ல் 29.3 ஆக இருந்தது. பத்து ஆண்டுகளுக்குமுன் அது 28ஆகப் பதிவானது.
சிங்கப்பூரர்களிடையே திருமணத்தைத் தள்ளிப்போடும் போக்கு நிலவுவதை இது காட்டுவதாகப் புள்ளிவிவரத் துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கிருமிப் பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் 2022ல் அதிகமானோர் திருமணம் செய்துகொண்டதற்கான காரணங்களில் அடங்கும் என்பதைத் திருமண ஏற்பாட்டுச் சேவை வழங்கும் நிறுவனங்கள் சுட்டின.
கொவிட்-19 நோய்ப்பரவலால் 2020, 2021ஆம் ஆண்டுகளில் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
5-10 ஆண்டுகளுக்குள் உறவை முறிப்பது அதிகம்
திருமணமாகி ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் அந்த உறவை முறித்துக்கொள்வோரே அதிகம் என்று திருமண, மணமுறிவுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரர்களிலும் நிரந்தரவாசிகளிலும் 9.6 விழுக்காட்டினர், அதிலிருந்து ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் மணவாழ்க்கையிலிருந்து வெளியேறினர்.
அதற்கடுத்தபடியாக, 2001ல் மணவாழ்வில் அடியெடுத்து வைத்த சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களில் 6.4 விழுக்காட்டினர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தங்களது திருமண உறவை முறித்துக்கொண்டனர்.
ஆயினும், அண்மைய ஆண்டுகளில் திருமணம் செய்துகொண்ட குடியிருப்பாளர்கள், முந்திய ஆண்டுகளில் மணமுடித்தோரைவிட, தங்களது திருமண உறவில் அதிக நிலைத்தன்மையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டோரில் 17 விழுக்காட்டினர், அடுத்த பத்தாண்டுகளுக்குள் திருமண உறவிலிருந்து விலகிவிட்டனர். ஆயினும், 2011ஆம் ஆண்டு மணவாழ்வில் அடியெடுத்து வைத்தோரில் இவ்விகிதம் 14.5 விழுக்காடாக இருக்கிறது.


