உற்பத்தித்துறை 4.9% சரிவு; 9வது மாதமாக இறங்குமுகம்

உற்பத்தித்துறை 4.9% சரிவு; 9வது மாதமாக இறங்குமுகம்

2 mins read
a429f37d-0adc-4fae-b224-81d9e774a165
உயிரியல் மருத்துவத் துறையின் உற்பத்தி ஜூனில் 1.8% குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஜூன் மாதம் 4.9% இறங்கியது. அந்தத் துறை தொடர்ந்து ஒன்பதாவது மாதமாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

உயிர்மருத்துவத் துறையின் உற்பத்தியைச் சேர்க்காமல் பார்த்தால் உற்பத்தி 5.2% குறைந்துவிட்டது.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்தது.

துல்லியப் பொருளியல் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு ஜூனில் 11.5% குறைந்தது. இயந்திரங்கள், கணினி பகுதிப்பொருள் தயாரிப்புத் துறை 6.9% இறங்கியது.

மொத்தமாகப் பார்க்கையில், துல்லியப் பொருளியல் துறை, சென்ற ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 7.2% குறைந்தது.

வேதித்துறை உற்பத்தி சென்ற ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூனில் 8.6 விழுக்காடு இறங்கியது.

பெட்ரோலிய வேதிப்பொருள் துறை 14.8% குறைந்தது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் வேதித்துறைக் குழுமத்தின் உற்பத்தி சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.6% குறைந்து இருக்கிறது.

பொது உற்பத்தித் துறை ஆண்டுக்காண்டு அடிப்படையில் ஜூனில் 7.5% குறைந்துள்ளது.

மொத்தமாகப் பார்க்கையில், பொது உற்பத்தித் துறைகளின் குழுமம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 6.4% குறைந்தது.

மின்னணுத் துறையின் தயாரிப்புகள் ஜூன் மாதம் 2.9% குறைந்தன. தகவல் தொடர்புத் துறை, பயனீட்டாளர் மின்னணுத் துறை ஆகியவை 17.7% சுருங்கின.

கணினிப் பாகங்கள், தகவல் சேகரிப்புச் சாதனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி 25.8% இறங்கியது.

உயிர்மருத்துவத் துறையின் உற்பத்தி ஜூன் மாதம் 1.8% இறங்கியது.

மருந்து தயாரிப்புத் தொழில்துறையின் உற்பத்தி 9.4% கூடியது. அதேவேளையில், மருத்துவ தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி 11.9% குறைந்தது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் தேவைகள் குறைந்ததே இதற்கான காரணம்.

இன்றைய தேதி வரையிலான ஓராண்டு அடிப்படையில் பார்க்கையில், உயிர்மருத்துவ உற்பத்திக் குழுமத்தின் தயாரிப்பு சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 2% குறைந்து இருக்கிறது.

போக்குவரத்துப் பொறியியல் தொழில்துறை ஜூன் மாதம் 10.8% கூடியது. விமானத் தொழில்துறை 16.7% கூடியதே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்