சட்டவிரோத வேலை நியமனம், சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 47 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.
அவர்களில் பெரும்பாலானோர் கிளார்க் கீயிலும் லிட்டில் இந்தியாவிலும் சமையல் ஊழியர்கள், சமையலறை உதவியாளர்கள் அல்லது உணவக ஊழியர்களாக சட்டவிரோதமாக வேலை செய்தனர்.
ஜூலை 12 முதல் 19ஆம் தேதிவரை அவ்விரு இடங்களில் 35 உணவு, பானக் கடைகளில் அமைச்சு சோதனை நடத்தியது. அதில் 20 கடைகள் வேலை நியமனச் சட்டங்களை மீறியது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து விசாரணை தொடர்கிறது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ், செல்லுபடியாகும் வேலை அனுமதி அட்டைகளை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே முதலாளிகள் வேலைக்கு எடுக்கலாம். அதிகாரபூர்வ முதலாளியைத் தவிர்த்து, வேறு நபர்களிடம் அல்லது வர்த்தகங்களில் வேலை செய்ய ஊழியர்களைச் சட்டவிரோதமாக பணியமர்த்துவது குற்றமாகும் என அமைச்சு விவரித்தது.
வேலை நியமன விதிகளுக்கு உட்பட்டு நடக்கின்றனவா என்பதைக் கண்டறிய அமைச்சு அப்போதைக்கு அப்போது நிறுவனங்களில் சோதனை நடத்துவதாக மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த திருவாட்டி ஷிரின் பானு தெரிவித்தார்.
“நியாயமான, பொறுப்பான வேலை நியமன நடைமுறைகளுக்கு உட்பட்டு நிறுவனங்கள் நடப்பதையும் சட்டத்தின்கீழ் ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதிசெய்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
செல்லுபடியாகும் வேலை அனுமதி அட்டை வைத்திருக்காத வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் முதலாளிகளுக்கு $5,000 முதல் $30,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முதலாளிகளுக்குத் தடை விதிக்கப்படும்.