தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்கு அரசு தடைவிதிக்க மீண்டும் வலியுறுத்து

2 mins read
இரண்டாவது அறிக்கையில் 53 குழுக்கள் கையெழுத்து
8931b9ff-c5f6-4266-b791-c442d9fc0b4c
லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு அரசாங்கம் உடனடியாகத் தடைவிதிக்க அந்த அறிக்கை அறைகூவல் விடுத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியர்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அழைத்துச் செல்வதில் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகளுக்கு அறைகூவல் விடுக்கும் இரண்டாவது அறிக்கை புதன்கிழமை காலை வெளியிடப்பட்டது.

‘லாரி சவாரிகளை நிறுத்தவும், ஊழியர்களின் உயிர்களைக் காக்கவும் - அவற்றை உடனடியாக தடை செய்யவும்’ எனும் தலைப்பிலான அந்தக் கடிதம் 53 குழுக்கள் சார்பில் வெளியிடப்பட்டது. அந்தக் குழுக்களில் சமூக அமைப்புகள், குடிமைக் குழுக்கள் உள்ளிட்டவை அடங்கும்.

லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்கு அரசாங்கம் உடனடியாகத் தடைவிதிக்க அந்த அறிக்கை அறைகூவல் விடுத்தது. பாதுகாப்பான பயண முறைக்கு மாறுவதில் சவால்களை எதிர்நோக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க போக்குவரத்து அமைச்சு திட்டம் ஒன்றை அமைக்குமாறும் அந்த அறிக்கை கோரியது.

பிரதமர் லீ சியன் லூங், இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஆகியோருடன் 18 அமைச்சர்களுக்கு அந்தக் கடிதம் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

ஊழியர்களை லாரிகளில் ஏற்றிச் செல்வதை நிறுத்த கால வரையறை விதிக்க அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுக்கும் அறிக்கையில் 47 குழுக்களும் தனிநபர்களும் கையெழுத்திட்டதாக இரு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியான நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

“மனிதர்களை ஏற்றிச் செல்வதற்காக சரக்கு லாரிகள் வடிவமைக்கப்பட்டதே இல்லை என்பது நிதர்சன உண்மை. மனிதர்களை ஏற்றிச் செல்வதற்காக லாரிகள் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. ஊழியர்களின் தன்மானத்தையும் அவை மீறுகின்றன,” என்று அண்மைய அறிக்கையில் கையெழுத்திட்ட குழுக்கள் கூறின.

இந்த விவகாரத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்காததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அக்குழுக்கள் அறிக்கையில் குறிப்பிட்டன.

ஊழியர்களை ஏற்றிச் செல்வதில் பலதரப்பட்ட மாற்று வழிமுறைகளைப் பல நாடுகளும் சார்ந்திருப்பதை அக்குழுக்கள் சுட்டின. பேருந்துகள், சிற்றுந்துகள், சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களைப் பகிர நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதையும் அவை சுட்டின.

குறிப்புச் சொற்கள்