ஜெட்ஸ்டார் ஏஷியா மலிவுக் கட்டண விமான நிறுவனம், 200க்கும் மேற்பட்ட விமானிகளையும் விமான ஊழியர்களையும் வேலையில் சேர்க்க திட்டமிடுகிறது.
கொவிட்-19க்குப் பிறகு, அதில் இருந்து மீண்டு தனது ஆற்றலை பலப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நிறுவனம் ஊழியர்களைச் சேர்க்கிறது.
ஜெட்ஸ்டார் ஏஷியா, 2023 முடிவு வாக்கில் மேலும் இரண்டு விமானங்களைச் சேவையில் ஈடுபடுத்துகிறது. இப்போது ஏழு விமானங்கள் சேவை வழங்கி வருகின்றன.
ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பரதன் பசுபதி, லிங்க்டின் தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தியில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
அடுத்த 18 மாதங்களில் மேலும் விமானங்களைச் சேவையில் அமர்த்த நிறுவனம் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டார். என்றாலும் மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
“நாங்கள் நிலையான வளர்ச்சியின் அருமையான புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம்,” என்று திரு பரதன் தெரிவித்தார்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம், கொவிட்-19 தொற்று காலத்தில் வேலையை விட்டுச் சென்ற விமானிகளில் பலரை மீண்டும் வேலையில் அமர்த்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜெட்ஸ்டார் ஏஷியா, வெஸ்ட்பூரூக் இன்வெஸ்ட்மெண்ட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்திற்கும் ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் நிறுவனத்திற்கும் சொந்தமான நிறுவனம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
புதிய விமானிகளையும் விமான ஊழியர்களையும் நேரடி ஆள்சேர்ப்புச் செயல்திட்டம் மூலம் நிறுவனம் வேலையில் சேர்க்கும்.
நிறுவனம், தொற்று தலைவிரித்து ஆடியபோது சிங்கப்பூரில் வேலை பார்த்த அதன் ஊழியர்களில் பாதிப்பேரை அதாவது சுமார் 180 பேரை 2020 ஜூலையில் குறைத்துவிட்டது. 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடையில் விமானங்கள் எண்ணிக்கையை 18 லிருந்து 7ஆகவும் அது குறைத்துவிட்டது.
கொவிட்-19க்குப் பிறகு இப்போது அனைத்துலக விமானப் பயணத்துறை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதற்குத் தோதாக ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனம் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறது.