தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபராவதற்கான முயற்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார் தர்மன்

3 mins read
ed0ce4a7-0a5f-49bc-97c7-e225e1c27ef4
திரு தர்மன் சண்முகரத்னம் ஜூலை 26ஆம் தேதி யோர்க் ஹோட்டலில் அதிபர் தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். அவரின் மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி உடனிருக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, அதிபராவதற்கான முயற்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்கி இருக்கிறார்.

‘ஒருவருக்கொருவர் மரியாதை’ என்ற கருப்பொருளுடன் திரு தர்மன் தனது முயற்சியைத் தொடங்கி இருக்கிறார்.

ஆர்ச்சர்ட்டில் உள்ள யோர்க் ஹோட்டலில் திரு தர்மன், நாட்டின் அதிபராவதற்கான தமது முயற்சியைத் தொடங்கி வைத்து ஊடகத்திடம் பேசினார்.

‘புதிய யுகத்திற்கான அதிபர்’ என்ற தனது இலக்கை அவர் கோடிட்டுக் காட்டினார்.

ஒருவர் கடந்தகாலத்தில் எந்தெந்த பொறுப்புகளை வகித்தார் என்பதன் அடிப்படையில் அவரைச் செயற்கையாக வகைப்படுத்தி பார்ப்பதற்கு எதிராக திரு தர்மன் எச்சரித்தார்.

முன்னாள் அதிபர் ஓங் டெங் சியோங்கை எடுத்துக்காட்டாகத் திரு தர்மன் குறிப்பிட்டார்.

‘‘கொள்கைகளின் தொடர்பில் சேவையாற்றி இருக்கின்ற அனுபவம் எனக்கு இருக்கிறது. சிங்கப்பூரில் அரசாங்கத்தை நிர்வகித்து நடத்துவது எந்த அளவுக்குச் சிக்கலானது என்பது எனக்குத் தெரியும்.

‘‘அரசியலில் பல ஆண்டுகாலம் இருந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. சிங்கப்பூரைப் பிரதிநிதித்து அனைத்துலகப் பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன். இவை எல்லாம் எனக்கு அனுகூலங்கள்,’’ என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

‘‘மக்கள் செயல் கட்சியில் நெடுங்காலமாக பணியாற்றி இருக்கிறேன். 22 ஆண்டுகாலம் அரசியல்வாதியாக அரசாங்கத்திலும் அடிப்படை நிலையிலும் சேவையாற்றி இருக்கிறேன். அதைப் பொறுத்தவரை எந்தவொரு மன வருத்தமும் எனக்குக் கிடையாது,’’ என்று திரு தர்மன் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கும் இதர இருவரைப் பற்றி கேட்டபோது, அவர்கள் கடந்த காலத்தில் வகித்த பொறுப்புகளின் அடிப்படையில் செயற்கையாக வேறுபடுத்தி பார்க்காமல் ஒவ்வொருவரின் ஆக்ககரமான தொண்டுகளைக் கவனிக்க வேண்டும் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் என்ன நினைப்பீர்கள் என்று கேட்டதற்குப் பதிலளித்த திரு தர்மன், தனக்குப் போட்டியாகக் களமிறங்க குறைந்தபட்சம் ஒருவராவது தகுதி பெறுவார் என்பதே தமது நம்பிக்கை என்றார்.

அதிபரின் பணி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை என்பதை திரு தர்மன் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு தம்மை முன்மொழிபவரையும் அதை ஆமோதிப்பவரையும் உறுதிப்படுத்தும் எட்டுப் பேரையும் திரு தர்மன் அறிமுகப்படுத்தினார்.

அவர்கள் அனைவரும் செய்தியாளர் மாநாட்டில் திரு தர்மனுடன் இருந்தனர்.

சிங்கப்பூர் சீனக் குலவழிச் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு தாமஸ் சுவாதான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக திரு தர்மனை முன்மொழிகிறார்.

முயிஸ் அமைப்பின் முன்னாள் தலைவரும் அல்ஜீரியாவுக்கான இப்போதைய தூதருமான திரு முகம்மது அலாமி மூசா அதை வழிமொழிகிறார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் ஒவ்வொருவரும் 10 பேரைக் கொண்ட ஒரு குழுவினரைத் திரட்ட வேண்டும். அவர்கள் அனைவரும் வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும்.

அந்த மனு, வேட்புமனு நாளன்று தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்தேதி இனிமேல்தான் அறிவிக்கப்படும்.

வேட்புமனு நாளன்று வேட்பாளர்கள் தகுதிச் சான்றிதழையும் தாக்கல் செய்ய வேண்டும். அந்தச் சான்றிதழை அதிபர் தேர்தல் குழு வழங்கும்.

வேட்பாளர்கள் தங்களுடைய சமூகச் சான்றிதழையும் அரசியல் நன்கொடைச் சான்றிதழையும் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.

அரசாங்கத்தில் இப்போது தான் இல்லை என்பதைக் குறிப்பிட்ட திரு தர்மன், என்றாலும் அதே நேர்மையுடன், அதே சுதந்திர சிந்தனையுடன், அதே மனிதராக தான் இன்னமும் இருந்து வருவதாக புதன்கிழமை தெரிவித்தார்.

‘‘சிங்கப்பூரும் உலகமும் இன்று எதிர்நோக்கும் சவால்கள் மிகவும் அடிப்படையானவை.

‘‘நாம் இப்போது உருமாற்ற காலகட்டத்தில் இருக்கிறோம். பொருளியல், புவிசார் அரசியல் அல்லது சுற்றுச்சூழல் உள்ளிட்ட உலக நெருக்கடிகளுடன் புதிய வழிகளில் எல்லா நாடுகளுமே சோதனைக்கு உட்படும்,’’ என்றும் அவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூரர்கள் அதிக பன்மய கண்ணோட்டங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிளவுபட்ட சமூகமாக ஆகிவிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே நம்முடைய சவால்,” என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

“அதிக பொது இடத்தைக்கொண்ட, வலுவான மையத்தைக் கொண்ட, எதிர்காலத்தின்மீது சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்ற ஜனநாயகம் நமக்குக் கட்டாயமானது,” என்று அவர் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜூன் மாதம் திரு தர்மன் அறிவித்தார். அவர், மக்கள் செயல் கட்சியில் இருந்தும் அரசாங்கத்தில் இருந்தும் ஜூலை 7ஆம் தேதி விலகிக்கொண்டார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தொழிலதிபர் ஜார்ஜ் கோ, ஜிஐசி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத் துறை தலைவர் இங் கோங் சோங் ஆகியோரும் தெரிவித்து இருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்