சிங்கப்பூரில் ஓராண்டு காலத்தில் முதன்முதலாக இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு குறைந்துள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்த ஊழியர் தேவை கொஞ்சம் மட்டுப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
மொத்த வேலை நியமன அதிகரிப்பு கொஞ்சம் மெதுவடைந்து 23,700 ஆக இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, 2020 இரண்டாவது காலாண்டிற்குப் பிறகு முதன்முதலாக இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளைக் கொண்ட சிங்கப்பூர்வாசிகளிடையே வேலையில் இருந்தோர் எண்ணிக்கை முன்பைவிடக் குறைவாக இருந்தது.
இருந்தாலும் சிங்கப்பூர்வாசிகள் வேலைநியமன அளவு, கொவிட்-19க்கு முன்னதாக 2019 டிசம்பரில் இருந்த அளவைவிட அதிகமாகவே தொடர்ந்து இருந்தது.
இது, தொழிலாளர் சந்தை மட்டுப்படுவதற்கான மேலும் ஓர் அறிகுறியாகும்.
மனித வள அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட பூர்வாங்கப் புள்ளிவிவரங்கள் இவற்றைத் தெரிவிக்கின்றன.
இந்தக் குறைவு, உணவு, பானச் சேவைத்துறை சில்லறை வர்த்தகத் துறைகளில் முக்கியமாகக் காணப்பட்டது.
ஆண்டின் முதல் காலாண்டில் இந்த நிலவரம் பொதுவான ஒன்றுதான் என்பதை அமைச்சு சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு மாறாக, சிங்கப்பூர்வாசி அல்லாத ஊழியர்கள் அதிகமாக இருந்தார்கள். குறிப்பாக கட்டுமானத்துறையில் இந்த நிலவரம் தெரியவந்தது.
கட்டுமானத்துறையில் வேலைகள் 2023 இரண்டாம் காலாண்டில் 10,500 கூடின. ஒர்க் பர்மிட் எனப்படும் வேலை அனுமதிச் சீட்டு ஊழியர்கள் அதிகமானதே இதற்கு முக்கிய காரணம்.
சமூகம், சமுதாயம், பிரத்யேகச் சேவைகள், நிதிச் சேவைகள், நிபுணத்துவச் சேவைகள் போன்ற துறைகளில் வேலை பார்த்த சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. என்றாலும் அந்த அதிகரிப்பு வேகம் குறைவாக இருந்தது.
வெளிநாட்டு ஊழியரைச் சேர்க்காமல் பார்க்கையில், சேவைத்துறையில் வேலை நியமனம், தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக மெதுவடைந்தது. 12,400 வேலைகள் அதிகமாயின.
இவை ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 3,820 ஆக இருந்த ஆட்குறைப்பு எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 3,200 ஆகக் குறைந்தது. இது தொற்றுக்கு முன் 2019ல் இடம்பெற்ற அளவை ஒத்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் சீரமைப்புதான், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இடம்பெற்ற ஆட்குறைப்புக்கு முக்கிய காரணம்.
சேவைத்துறைகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பச் சேவைகள் துறையும் மொத்த விற்பனைத் துறையும்தான் அதிக ஆட்குறைப்புகளை ஏற்படுத்தின.
இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் வரைப்பட்ட காலாண்டில் சேவைகள் துறையில் ஆட்குறைப்பு 2,400 ஆக இருந்தது.
அதேவேளையில் உற்பத்தித்துறையில் ஆட்குறைப்பு குறைந்தது. இதர துறைகளில் இடம்பெற்ற ஆட்குறைப்புகள் குறைந்தன அல்லது பெரும்பாலும் நிலையாக இருந்தன.
வேலையில்லா விகிதம் 2023 ஜூனில் மாற்றமின்றி 1.9 என்ற ஒட்டுமொத்த அளவாக இருந்தது. இந்த விகிதம், ஏப்ரல், மே மாதங்களில் கொஞ்சம் கூடியது.
உலக அளவில் பொருளியல் நிலவரங்கள் சரியில்லை. இதன் விளைவாக சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி முந்தைய காலாண்டுகளில் மிதமடைந்தது. இதன் தாக்கம் காரணமாக வேலை நியமன அதிகரிப்பு வேகம் குறைந்தது.
ஊழியர் சேர்ப்பு, சம்பள உயர்வு இரண்டையும் பொறுத்தவரை நிறுவனங்கள் வருங்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும் என்றே தெரிகிறது.
அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களைச் சேர்க்கப்போவதாகக் கூறும் நிறுவனங்கள் விகிதம் 2023 மார்ச்சில் 64.8% ஆக இருந்தது. இது 2023 ஜூனில் 58.2% ஆகக் குறைந்துவிட்டது.
அதே காலகட்டத்தில் ஊதியத்தை உயர்த்த திட்டமிடும் நிறுவனங்களின் விகிதம் 38.2%லிருந்து 28.0% ஆகக் குறைந்துவிட்டது.