ஒருங்கிணைந்த சுகாதார தகவல் நிறுவனம் என்ற சிங்கப்பூரின் சுகாதார தொழில்நுட்ப அமைப்பு கடந்த 15 ஆண்டு காலமாக பொது சுகாதாரப் பாராமரிப்பு நிறுவனங்களுக்கும் பங்காளிகளுக்கும் ஆதரவு அளித்து வந்துள்ளது.
இப்போது அதனுடைய எல்லைகளும் சேவைகளும் விரிவடைகின்றன. இதனையொட்டி அந்த நிறுவனம் ‘சினாப்ஸ்’ என்ற புதிய பெயருடன் சீரமைக்கப்பட்டு இருக்கிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிங்கப்பூர் கண்காட்சிக் கூடத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் புதிய பெயரை வெளியிட்டார்.
அந்த நிறுவனத்தின் ஐந்து முக்கிய உத்திபூர்வ முன்னுரிமைகளையும் அவர் பட்டியலிட்டார்.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறை நோய்களை முன்னதாகவே தவிர்த்துக்கொள்ளும் அணுகுமுறையை நோக்கிச் செல்கிறது.
சமூக அமைப்புகள், வீடுகள் போன்ற மருத்துவமனைகள் அல்லாத இதர இடங்களில் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதும் அந்த அணுகுமுறையின் நோக்கமாக இருக்கிறது.
இதனையொட்டி புதிய முன்னுரிமைகள் இடம்பெறுகின்றன.
சினாப்ஸ், நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை மின்னிலக்க ரீதியில் பதிந்து வைத்திருக்கும் மைய அமைப்பாக தன்னுடைய பணியைத் தொடர்ந்து ஆற்றும். இது முதலாவது முன்னுரிமையாகும்.
தொடர்புடைய செய்திகள்
அந்த நிறுவனம் அமைத்து இருக்கும் தேசிய மின்னணுச் சுகாதார ஆவண முறை என்ற ஓர் ஏற்பாட்டின் மூலாதார நோக்கம் இதுவே ஆகும்.
நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மருத்துவர்கள் அந்த ஆவண முறை மூலம் அந்த நோயாளியின் விவரங்களை எல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.
அந்த முறையை இப்போது ஒவ்வொரு மாதமும் 21,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களும் நிர்வாகத் துறையினரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஹெல்த்ஹப் என்ற செயலி மூலம் தங்கள் சொந்த சுகாதாரப் பதிவேடுகளையும் இதர பலவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
தொலைதூர மருத்துவ கலந்தாலோசனைக்காக ஓர் ஏற்பாட்டை உருவாக்குவது இரண்டாவது முதன்மையாகும்.
தொடக்க பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இது முக்கியமான ஒன்று என்று அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய அளவிலான கட்டணப் பட்டியல் முறைக்கான தேவையை நிறைவேற்ற வேண்டியது அடுத்த முன்னுரிமையாக இருக்கும்.
இப்போது மருத்துவ குழுமங்கள், மருத்துவமனைகள், பொது, தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு இடையே வெவ்வேறான பட்டியல் முறைகள் இருக்கின்றன.
குறைந்தபட்சம் பொதுத் துறைக்கு ஒரே மாதிரியான பட்டியல் முறை இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
வலுவான இணைய கணினித் தகவல் பாதுகாப்பு மற்றொரு முன்னுரிமையாகும்.
எதிர்கால சாத்தியங்கள் பற்றியும் அமைச்சர் விளக்கினார். சுகாதாரப் பராமரிப்பு என்பது தொழில்நுட்பப் புரட்சியின் மையமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நோய்களை முன்னதாகவே தவிர்த்துக் கொள்கின்ற, ஒவ்வொருவரும் தன் உடல்நலனிற்கு தானே பொறுப்பெடுத்துக் கொள்கின்ற புதிய ஒரு யுகத்தில் நோய்களைக் கண்டுபிடிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கக் கூடியவையாக இருக்கும்.
இயந்திர மனித தொழில்நுட்பம் ஏராளமான காரியங்களைச் சாத்தியமாக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறை என்பது ஊழியர்கள் கவனம் செலுத்தக்கூடிய, அவர்களின் சேவை தேவைப்படக்கூடிய ஒரு துறையாக இருக்கும் என்பதால் இதில் ஊழியர்களுக்குப் பதிலாக மனித இயந்திர தொழில்நுட்பம் பெரிய அளவில் இடம்பெறக்கூடிய சாத்தியம் இராது என்பதையும் அமைச்சர் சுட்டினார்.

