தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூலை 28 முதல் வடக்கு - கிழக்கு ரயில் பாதையில் புதிய ரயில்கள்

2 mins read
1666874f-e7c3-4c8f-a8c6-fb47658dbb14
ஜூலை 28 முதல் ஆறு புதிய ரயில்கள் வடக்கு - கிழக்கு ரயில் பாதையில் படிப்படியாக ஓடத் தொடங்கும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடக்கு - கிழக்கு ரயில் பாதையில் (NEL) ஜூலை 28 முதல் ஆறு புதிய ரயில்கள் படிப்படியாக ஓடத் தொடங்கும். அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ள ரயில் பாதை நீட்டிப்புக்காகப் பயணிகள் கொள்ளளவைக் கூட்டுவதற்கு இந்த ரயில்கள் துணைபுரியும்.

ஆறு புதிய ரயில்களும் 2023 மூன்றாம் காலாண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுக்கான மொத்த செலவு $130 மில்லியன்.

புதிய ரயில்களுடன், வடக்கு - கிழக்கு ரயில் பாதையில் மொத்தம் 49 ரயில்கள் ஓடும். தற்போது 43 ரயில்கள் உள்ளன.

புதிய ரயில்களில் இரண்டில் தானியக்கத் தடக் கண்காணிப்பு இயக்கம் உள்ளது. எஸ்பிஎஸ் டிரான்சிட் நடத்தும் வடக்கு கிழக்கு ரயில் பாதையில் இந்த இயக்கம் முதல்முறையாக அறிமுகமாகிறது.

இரு ரயில்களின் அடிப்பகுதியிலும் புகைப்படக்கருவிகளும் உணர்கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது. ரயில்கள் தடத்தில் ஓடும்போது தடத்தின் நிலையைக் கண்காணிக்க அக்கருவிகள் பயன்படும்.

தடத்தில் உள்ள பழுதுகளைக் கண்டறிந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இது துணைபுரியும். தற்போது நேரடியாகச் செய்யப்படும் தடச் சோதனைகளுக்கு கருவிகளின் கண்காணிப்பு கைகொடுக்கும்.

வடக்கு - தெற்கு, கிழக்கு - மேற்கு ரயில் பாதைகளின் நான்கு புதிய ரயில்களிலும், தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரு ரயில்களிலும் கண்காணிப்பு இயக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு ரயில் பாதையின் புதிய ரயில்கள், பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையத்தை புதிய பொங்கோல் கோஸ்ட் நிலையத்துடன் இணைக்கவிருக்கும் நீட்டிப்புக்காகக் கொள்ளளவைக் கூட்டும்.

பொங்கோல் நார்த்தில் இருந்து நகர மையத்திற்கும் சிங்கப்பூரின் மற்ற பகுதிகளுக்கும் செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தை 15 நிமிடம் வரை குறைப்பதற்கு இந்த நீட்டிப்பு உதவும்.

“புதிய ரயில்கள், ரயில் வருகைநேர இடைவெளியைக் குறைத்து, சேவையை மேம்படுத்தி குடியிருப்பாளர்களுக்கும் பயணிகளுக்கும் கூடுதல் வசதியளிக்கும்,” என்று புதிய ரயில்களின் அறிமுக நிகழ்ச்சியில் இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் வியாழக்கிழமை கூறினார்.

அல்ஸ்டொம் எனும் பிரெஞ்சு நிறுவனம் ஸ்பெயினில் தயாரித்த ஆறு புதிய ரயில்களும், வழக்கமான ஆரஞ்சு-ஊதா நிறத்திற்குப் பதிலாக ஊதா நிறத்தில் இருக்கும். இந்த ரயில்கள் 2021 ஏப்ரல் மாதம் சிங்கப்பூரை வந்தடைந்ததிலிருந்து விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

வடக்கு - கிழக்கு ரயில் பாதையில் ஏற்கனவே சேவையில் இருக்கும் 25 சி751ஏ ரயில்களில் நான்கு புதுப்பிக்கப்பட்டுவிட்டதாகவும், மீதி ரயில்கள் 2026க்குள் புதுப்பிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது. இந்த முதலாம் தலைமுறை ரயில்கள், வடக்கு - கிழக்கு ரயில் பாதை செயல்படத் தொடங்கிய 2003 ஜூன் மாதத்திலிருந்து சேவையில் உள்ளன.

ரயில்களின் சராசரி ஆயுட்காலமான 30 ஆண்டுகளைத் தொடுவதற்குமுன் அவை மேம்படுத்தப்படுகின்றன. வடக்கு கிழக்கு ரயில் பாதையில் 18 இரண்டாம் தலைமுறை ரயில்களும் சேவையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்