தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டில் மருத்துவமனைப் பராமரிப்பு எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்

2 mins read
4f8d5289-69c8-4e0b-827d-f2a60ff80f43
தொலைத்தொடர்புவழி சுகாதாரச் சேவைகள் வழங்கும் நடைமுறையை சாத்தியமாக்க தேசிய சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்ப அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்: அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகளில் பலவும் ஒருவரின் வீட்டிலேயே வழங்கப்படலாம்.

தொலைத்தொடர்புவழி சுகாதாரச் சேவைகள் வழங்கும் நடைமுறை அதிக நூதனமடையும். பராமரிப்பை மேம்படுத்தவும், மருத்துவர், தாதியரின் பணிச்சுமையைக் குறைக்கவும், நோயாளியின் பராமரிப்பை அதிக துல்லியமாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவும்.

அவரவருக்குரிய பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிகமாக நடமாடும்படி, உணவைக் குறைக்கும்படி, அல்லது நன்றாகத் தூங்கும்படி செயலி அல்லது அணியக்கூடிய கருவி மூலம் உந்தப்படும்.

புதிதாகத் தொடங்கப்பட்ட மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி உத்தியின்கீழ் குடிமக்கள் தங்களது ஆரோக்கியத்திற்குப் பொறுப்பெடுத்துக்கொள்ள இவை அனைத்தும் துணிபுரியும்.

இதனை விரைவில் சாத்தியமாக்க, சினாப்ஸ் (Synapxe) எனும் தேசிய சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்ப அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருவதாக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி கியாம் சியூ யிங் வியாழக்கிழமை கூறினார். முன்பு ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் செயலியக்கம் (IhiS) என்றறியப்பட்ட அமைப்பின் புதிய அடையாளத்தின் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேட்டி அளித்தார்.

மருத்துவமனைகள், நிபுணத்துவ சிகிச்சை நிலையங்கள், பலதுறை மருந்தகங்கள் உள்ளிட்ட 46 பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கும், சமூக மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள், தனியார் மருத்துவர்கள் போன்ற 1,400 பங்காளிகளுக்கும் சினாப்ஸ் ஆதரவளிக்கிறது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், தனது அமைச்சின் முக்கிய அமைப்பான சினாப்ஸ், நோயாளியின் மருத்துவப் பதிவேடுகள், தரவுகள், பராமரிப்பு, மருந்துகள், சுகாதாரப் பராமரிப்பு கட்டணத் தள்ளுபடிகள், உதவிகள் அனைத்தும் தங்குதடையின்றி சீராக இணைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் என்று கூறினார்.

மனித உடலில் உள்ள நியூரான்கள் ஒன்றுக்கொன்றும் உடல் முழுவதும் தகவல் அனுப்பத் துணைபுரியும் “சினப்சிஸ்” போல் சினாப்ஸ் அமைப்பு செயல்படும் என்றார் அவர்.

சுகாதாரப் பராமரிப்புத் துறையை இணைக்க உதவும் ஐந்து முக்கிய அம்சங்களை திரு ஓங் பட்டியலிட்டார். நோயாளிகளின் மருத்துவப் பதிவேடுகள் பாதுகாத்து வைக்கப்படும் தேசிய வைப்பகம், தொலைத்தொடர்பின்வழி மருத்துவ ஆலோசனை வழங்கும் நடைமுறை ஆகியவை அதில் உள்ளடங்கும்.

சிங்கப்பூரில் ஏற்கனவே சுகாதாரப் பராமரிப்பில் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டு வருகிறது. இதன் வேகம் துரிதமடையும் என்று திருவாட்டி கியாம் கூறினார்.

சுமார் 4,000 பேர் பணிபுரியும் சினாப்ஸ் அமைப்பு, சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை ஆராய்வதற்காக “ஹெல்த் எக்ஸ்” எனும் புத்தாக்கத் தளத்தைத் தொடங்கியது.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு ஆதரவளிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை சினாப்ஸ் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் திருவாட்டி கியாம் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு பெருமளவு முன்னேற்றம் அடைந்திருப்பதால், எதிர்காலத்தில் மனிதர்களைவிட குறைவான தவறுகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்