திமோர் லெஸ்டே: திமோர் லெஸ்டே பெரும் ஆற்றல் கொண்டதொரு நாடு. அந்நாடு தனது வளர்ச்சி இலக்குகளை அடைய சிங்கப்பூரால் உதவ முடியும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் புதன்கிழமை கூறினார்.
திமோர் லெஸ்டே அரசாங்கத்துடன் சிங்கப்பூருக்கு “குறிப்பிடத்தக்க அளவு நல்லெண்ணம், நம்பிக்கை, அரசியல் மூலதனம்” இருப்பதாகத் தலைநகர் டிலிக்கு அளித்த வருகையின்போது சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பேசினார்.
திமோர் லெஸ்டே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆரம்பகாலத்தில் சிங்கப்பூர் அளித்த ஆதரவை அந்நாடு ஞாபகம் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“அவர்கள் சிங்கப்பூரைப் பிரியத்துடன், நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள். குறிப்பாக அவர்களது ஆற்றலை மேம்படுத்த நாம் உதவி செய்வோம் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்,” என்றார் அவர்.
திமோர் லெஸ்டே 2002 மே மாதம் சுதந்திர நாடானது. அதன் பரப்பளவு சிங்கப்பூரைவிட 20 மடங்கு பெரியது. ஆனால், மக்கள்தொகை சிங்கப்பூரின் மக்கள்தொகையில் கால்பகுதி.
திமோர் லெஸ்டேயின் இளம் மக்கள், வேளாண்மைத் துறை, சுற்றுலாத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் ஆகியவற்றில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பற்பல வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆனால், உழைப்பின் பலன் உடனடியாகத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் பெலிகன் பேரடைஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த உல்லாசத்தளம் அமைக்கும் பணியில் கடந்த 14 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறது. இப்பணியைப் பூர்த்தி செய்வதற்கு நீண்டகாலம் ஆனபோதிலும் நிறுவனம் கைவிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“(திமோர் லெஸ்டேயின்) இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான வாய்ப்புகளை உருமாற்ற உதவுவது அவர்களது திட்டம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
திமோர் லெஸ்டேயின் இளம் மக்களது சுகாதார, கல்வித் திறன்களை மேம்படுத்துவது முக்கியம் என்றும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
“திமோர் லெஸ்டே கடந்த 20 ஆண்டுகளில் சுகாதாரப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இருந்தாலும், செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூர் மருத்துவர்களான டாக்டர் லூயிஸ் ஹொங்கும் அவரது கணவர் நடராஜன் ராஜாராமனும், திமோர் லெஸ்டேயில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த அங்குள்ள சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதை அமைச்சர் எடுத்துக்காட்டாகக் கூறினார்.
கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2016ஆம் ஆண்டு டிலியில் செயின்ட் பால்ஸ் மெத்தடிஸ்ட் பள்ளியைத் தொடங்கிய சிங்கப்பூரர்கள் டேவிட் சான், ஜெசி சான் ஆகியோர் மற்றோர் எடுத்துக்காட்டு.
இவை தவிர, திமோர் லெஸ்டேயின் ஆற்றலை வளர்க்கவும் சிங்கப்பூர் அதிக உதவி செய்யத் திட்டமிடுகிறது.
“இதுவரை 800க்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்து நம்முடன் நேரம் செலவிட்டுள்ளனர்; நாமும் ஒரு குழுவை அனுப்பி வைத்திருக்கிறோம். இனிமேலும் தொடர்ந்து குழுக்களை அனுப்பி, அவர்களை (சிங்கப்பூருக்கு) அழைப்போம்,” என்றார் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.
சிங்கப்பூருக்கும் திமோர் லெஸ்டேவுக்கும் இடையில் வாரந்தோறும் இரு நேரடி விமானப் பயணங்கள் சேவை வழங்குகின்றன. பயண நேரம் மூன்று மணிநேரம். விமானப் பயணங்கள் அதிகரிக்கையில், திமோர் லெஸ்டேக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
திமோர் லெஸ்டேயில் வேலை செய்யும், வசிக்கும், முதலீடு செய்யும் சிங்கப்பூரர்களுக்காக அங்கு ஒரு தூதரகம் திறக்கப்படும் என்று அவர் திங்கட்கிழமை அறிவித்தார்.

