கேலாங்கில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை பிற்பகல் தீச்சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 70 வயது ஆடவர் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
புளோக் 34 கேசியா கிரசெண்ட்டில் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிற்பகல் 12.45 மணியளவில் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
“தீயை அணைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, வேறு சில தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டில் தேடினர். படுக்கையறை தரையில் சுயநினைவின்றிக் கிடந்ததைக் கண்டறிந்தனர்,” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து கீழ்த்தளத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்ட அந்த ஆடவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
“பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவருக்குத் தொடர்ந்து சிபிஆர் செய்தனர்,” என்று அது தெரிவித்தது.
சமையலறையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.