“தண்ணீர் குடிக்கும்போது, அது எங்கிருந்து வந்தது என்பதை யோசிக்கவேண்டும்.”
ஒருவரது கடந்தகாலத் தொடர்புகளிலிருந்து அவரை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது என்பதை வலியுறுத்துவதற்காக இந்தச் சீனப் பழமொழியைக் கூறினார் இங் கோக் சோங்.
அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள திரு இங், வியாழக்கிழமை கேலாங் சிராய் சந்தைக்கு வருகையளித்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.
சுயேச்சையான சிந்தனை பற்றி திரு தர்மன் சண்முகரத்னம் கூறிய கருத்துகளின் தொடர்பில் பேசிய திரு இங், “நமது நிகழ்காலத்திற்கு நமது கடந்தகாலத்துடன் தொடர்புண்டு. நமது நிகழ்காலத்தை நமது கடந்தகாலத்திலிருந்து அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது,” என்று கூறினார்.
“அரசாங்கச் சேவையில் 45 ஆண்டுகாலம் பணியாற்றியது என்னுடைய கடந்தகாலம். திரு தர்மன் அரசியல் தலைமைத்துவத்தில் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இதிலிருந்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்,” என்றார் ஜிஐசி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத்துறை தலைவரான திரு இங்.
திரு தர்மன் ஜூலை 7ஆம் தேதி மூத்த அமைச்சர் பதவியிலிருந்தும், ஆளும் மக்கள் செயல் கட்சியிலிருந்தும் விலகிக் கொண்டார். அவர் சிங்கப்பூரின் அதிபராவதற்கான முயற்சியைப் புதன்கிழமை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.
ஒருவரது கடந்தகாலத் தொடர்புகளுக்குப் பதிலாக, அவரது நேர்மறையான பண்புகள், சாதனைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் ஆற்றக்கூடிய பங்களிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பாளரையும் மதிப்பிடுமாறு பொதுமக்களிடம் திரு தர்மன் வலியுறுத்தினார். புதிய யுகத்திற்கான அதிபராகப் பணியாற்றும் தொலைநோக்கையும் திரு தர்மன் முன்வைத்தார்.
இதன் தொடர்பில் கருத்துரைத்த திரு இங், அதிபர் பதவிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமநிலை புதிய யுகத்தின் ஓர் அம்சம் என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூர் மக்கள் புதிய யுகத்தில் இந்தச் சமநிலையைக் காண விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்: அரசியலுக்கு அப்பாற்பட்டவராக, எந்தவித அரசியல் தொடர்பும் இல்லாதவராக அதிபர் இருப்பதை,” என்றார் அவர்.
திரு தர்மன் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, போட்டியை வரவேற்பதாகச் சொன்னதன் தொடர்பில் இவ்வாறு கருத்துரைத்ததாகத் திரு இங் கூறினார்.
“தேர்தல் நடைபெறவேண்டும் என்பதற்காகவும், சிங்கப்பூரர்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைப்பதற்காகவும் நான் போட்டியிட முன்வந்திருக்கிறேன்,” என்றார் அவர்.