கட்டம் 2பி மாணவர் பதிவு: 30 தொடக்கப் பள்ளிகள் சீட்டுக்குலுக்கு நடத்தும்

கட்டம் 2பி மாணவர் பதிவு: 30 தொடக்கப் பள்ளிகள் சீட்டுக்குலுக்கு நடத்தும்

1 mins read
c8e08155-421c-4c56-b067-2b6370dea3d6
இந்த ஆண்டின் மிகப் பிரபலமான பள்ளிக்கூடங்களின் பட்டியலில் மரின் பரேடில் செயல்படும் தோவ் நான் பள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொடக்கப் பள்ளி முதல் வகுப்பு மாணவர் பதிவு நடைமுறையில் மிக அண்மைய கட்டமான 2பியில் உள்ள இடங்களுக்கு 30 தொடக்கப்பள்ளிகள் சீட்டுக்குலுக்கு நடத்தும்.

கடந்த 2022 மாணவர் பதிவு நடைமுறையின்போதும் இதே எண்ணிக்கையிலான பள்ளிக்கூடங்கள் சீட்டுக்குலுக்கு நடத்தின.

கல்வி அமைச்சு, கட்டம் 2பி மாணவர் பதிவு பற்றிய ஆகப்புதிய நிலவரங்களைத் தனது இணையத்தளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றியது. இந்தக் கட்டப் பதிவு ஜூலை 25ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த ஆண்டின் மிகப் பிரபலமான பள்ளிக்கூடங்களின் பட்டியலில் மரின் பரேடில் செயல்படும் தோவ் நான் பள்ளி முதல் இடத்தில் இருக்கிறது.

அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் 20 இடங்களுக்கு 68 மாணவர்கள் பதிந்து இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்களான மாணவர்களைச் சேர்க்க சீட்டுக்குலுக்கு நடத்தப்படும்.

செங்காங்கில் உள்ள நான் சியாவ் தொடக்கப்பள்ளியில் இருக்கும் 44 இடங்களுக்கு 123 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

ஹவ்காங்கில் உள்ள ஹோலி இன்னோசெண்ட்ஸ் தொடக்கப் பள்ளி 20 இடங்களுக்கு 53 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

டோவரில் உள்ள ஃபேர்ஃபீல்டு மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி, பீஷானில் உள்ள அய் தோங் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும் சீட்டுக்குலுக்கு நடத்தும் பள்ளிகளில் உள்ளடங்கும்.

சீட்டுக்குலுக்கு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்