ஆசியான் உலகத்திறன் போட்டிகள் 2023ல் சிங்கப்பூருக்கு எட்டு தங்கப்பதக்கங்கள்

ஆசியான் உலகத்திறன் போட்டிகள் 2023ல் சிங்கப்பூருக்கு எட்டு தங்கப்பதக்கங்கள்

2 mins read
11aa4377-f83b-4b6d-b8ce-d17270d17d78
உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 44 மாணவர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தனர். அவர்கள் மொத்தம் 26 பதக்கங்களை வென்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முதல்முறையாக ‘வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஆசியான்’ எனப்படும் ஆசியான் உலகத்திறன் போட்டிகளை ஏற்றுநடத்தியது. 13வது முறையாக நடைபெற்ற அப்போட்டிகள் சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்றன.

ஆசியான் வட்டார நாடுகளைச் சேர்ந்த 170க்கு மேற்பட்ட இளையர்கள் அவற்றில் கலந்துகொண்டனர். 22 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இங்குள்ள உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 44 மாணவர்கள் அனைத்துப் பிரிவுகளிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தனர். அவர்கள் மொத்தம் 26 பதக்கங்களை வென்றனர்.

அவற்றில் எட்டு தங்கம், நான்கு வெள்ளி, எட்டு வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். மற்ற ஆறும் உன்னதத்துக்கான பதக்கங்கள்.

இந்த வட்டாரத்தின் ஆகப் பெரிய திறன்சார் போட்டிகளாகக் கருதப்படும் ‘வேர்ல்ட்ஸ்கில்ஸ் ஆசியான்’ போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தோனீசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அது 14 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 27 பதக்கங்களை வென்றது. பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.

அழகு சிகிச்சை, சமையல், கணினி எண் கட்டுப்பாட்டு நிர்வாகம், வரைகலை வடிவமைப்புத் தொழில்நுட்பம், தொழில்துறை கட்டுப்பாடு, தகவல் கட்டமைப்புக் கம்பிவடச் சேவை போன்ற துறைகளில் சிங்கப்பூர் மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

இளையர்களிடையே திறன் தரநிலையை உயர்த்துவதும் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி தொடர்பான வாய்ப்புகளை அதிகரிப்பதும் இப்போட்டிகளின் நோக்கம்.

போட்டிகளின் இறுதிநாளான வியாழக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். ஆசியான் நாடுகள் வாழ்நாள் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்திய அவர், உலக அரங்கில் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள அது அவசியம் என்றார்.

குறிப்புச் சொற்கள்