சிங்கப்பூரில் மூன்று வாரங்களுக்குமுன் கால்டெக்ஸ் நிறுவனமும் அதைத் தொடர்ந்து ஷெல் நிறுவனமும் எரிபொருள் விலையைக் கூட்டியதை அடுத்து தற்போது அனைத்து நிறுவனங்களும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் எரிபொருள் விலைக் கண்காணிப்பு இணையத்தளமான ‘ஃபூயல் காக்கி’ தளம், எரிபொருள் விலை அண்மை வாரங்களில் தொடர்ந்து உயர்வதாகப் பதிவிட்டுள்ளது.
தற்போது 92-ஆக்டேன் ரகப் பெட்ரோல் விலை எஸ்பிசியில் ஒரு லிட்டருக்கு $2.73. கால்டெக்சில் $2.80க்கு விற்கப்படுகிறது.
95-ஆக்டேன் ரகப் பெட்ரோல் விலை எஸ்பிசியில் ஒரு லிட்டருக்கு $2.77, கால்டெக்ஸ், ஷெல் இரண்டிலும் ஒரு லிட்டர் $2.85. மூன்று வாரங்களுக்கு முன்பைவிட அது லிட்டருக்கு ஆறு காசு வரை அதிகம்.
98-ஆக்டேன் ரகப் பெட்ரோல் விலை எஸ்பிசியில் ஒரு லிட்டர் $3.25, ஷெல்லில் $3.34.
பிரிமியம் 98-ஆக்டேன் ரகப் பெட்ரோல் சினோபெக்கில் ஒரு லிட்டர் $3.41, ஷெல்லில் $3.56. மூன்று வாரங்களுக்கு முன்பைவிட இது லிட்டருக்கு 31 காசு வரை உயர்ந்துள்ளது.
டீசல் தற்போது எஸ்பிசியில் ஒரு லிட்டர் $2.39க்கும் கால்டெக்ஸ், ஷெல் இரண்டிலும் $2.46க்கும் விற்பனையாகிறது. இது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்ததைவிட லிட்டருக்கு 9 காசு வரை அதிகம்.
கச்சா எண்ணெய் விலை அண்மையில் உயர்ந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஜூன் மாதம் அதன் விலை ஒரு பீப்பாய்க்கு US$72ஆக இருந்தது. வியாழக்கிழமை, ஒரு பீப்பாய்க்கு US$86ஆக அதன் விலை உயர்ந்தது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக விலை அது.
பெரிய அளவிலான எண்ணெய் உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தேவை அதிகரிக்கும், உலகளாவிய வளர்ச்சி அதிகரிக்கும் என்ற பரவலான எதிர்பார்ப்பும் அதற்குக் காரணம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது சலுகைகளுக்குப் பிறகு, 92-ஆக்டேன் ரகப் பெட்ரோல் ஆக அதிகமாக கால்டெக்சில் ஒரு லிட்டர் $2.34க்கும் ஆகக் குறைவாக எஸ்பிசியில் $2.32க்கும் விற்கப்படுகிறது.
95-ஆக்டேன் ரகப் பெட்ரோல், சலுகைகளுக்குப் பிறகு ஆக அதிகமாக ஷெல்லில் ஒரு லிட்டர் $2.43க்கும் சினோபெக்கில் $2.20க்கும் விற்பனை ஆகிறது.
சலுகைகளுக்குப் பிறகு ஆக அதிக விலையுள்ள எரிபொருளாக பிரிமியம் 98-ஆக்டேன் ரகப் பெட்ரோல் விளங்குகிறது. ஷெல்லில் அதன் விலை ஒரு லிட்டருக்கு $3.02ஆக உள்ளது.

