வடக்கு-தெற்கு எம்ஆர்டி வழித்தடத்தில் அமைந்திருக்கும் சுவா சூ காங், புக்கிட் கோம்பாக் நிலையங்களுக்கு இடையே பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையம் புதிதாக அமைகிறது.
அந்த நிலையம் 2034ஆம் ஆண்டு திறக்கப்படும்.
வருங்காலத்தில் அமையவிருக்கின்ற தெங்கா நகரில் இடம்பெற்று இருக்கும் பிரிக்லேண்ட் வட்டாரம், பெவிலியன் பூங்கா, கியட் ஹோங், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் ஆகியவற்றின் குடியிருப்பாளர்களுக்கு அந்தப் புதிய நிலையம் மிகவும் வசதியாக இருக்கும்.
பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையம் செயல்படும்போது குடியிருப்பாளர்கள் பத்து நிமிடங்களில் நடந்து அந்த நிலையத்திற்குச் சென்றுவிடலாம்.
பிரிக்லேண்ட் வட்டாரத்தில் 2027 இறுதிவாக்கில் முதலாவது வீடமைப்புத் திட்டம் நிறைவுபெறும்.
நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த விவரங்களை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிரிக்லேண்ட் எம்ஆர்டி நிலையத்தின் வடிவமைப்பு, கட்டுமானப் பணி 2024ல் தொடங்கி 2034ல் முடிவடையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய எம்ஆர்டி நிலையத்தோடு மேம்பாலச் சாலை ஒன்றும் மாற்றுத் தண்டவாள வழிகளும் அந்தப் பகுதியில் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்லேண்ட் நிலையம் கட்டி முடிக்கப்படும்போது அருகில் இருக்கும் கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும்.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு கல்லூரி, சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப் பள்ளி, செயின்ட் ஆண்டனிஸ் தொடக்கப்பள்ளி போன்ற கல்வி நிலையங்கள் அங்கு அமைந்து இருக்கின்றன.
வடக்கு-தெற்கு வழித்தடத்தில் இப்போது 27 நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடம் மரினா சவுத் பியரில் இருந்து ஜூரோங் ஈஸ்ட் வரை செல்கிறது.
புதிய ரயில் நிலையம் செயல்படும்போது புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5ல் இருந்து உட்லண்ட்ஸ் வட்டார மையத்திற்கு அல்லது ஜூரோங் லேக் வட்டாரத்திற்குச் செல்லும் ரயில் பயணிகளுக்கு 15 நிமிட நேரம் மிச்சமாகும்.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள பெவிலியன் குடியிருப்புப் பேட்டையில் இருந்து பொதுப் போக்குவரத்து வழியாக ராஃபிள்ஸ் பிளேஸ் செல்ல வருங்காலத்தில் 50 முதல் 40 நிமிட நேரம் மிச்சமாகும்.
நிலப் போக்குவரத்து பெருந்திட்டம் 2040ன் ஒரு பகுதியாக பிரிக்லேண்ட் ரயில் நிலையத்தை கட்டுவதற்கான திட்டம் பற்றி 2019ல் அதிகாரிகள் அறிவித்தனர்.
பிரிக்லேண்ட் ரயில் நிலையம் இப்போதைய மேல்மட்ட ரயில் வழித்தடத்தில் கட்டப்படும் மூன்றாவது எம்ஆர்டி நிலையமாகும்.
இதற்கு முன்பாக கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் கட்டப்பட்ட இத்தகைய டோவர் ரயில் நிலையம் 2001ல் திறக்கப்பட்டது. வடக்கு-தெற்கு வழித்தடத்தின் கேன்பரா ரயில் நிலையம் 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நான்காவது நிலையம் இப்போது கட்டப்பட்டு வருகிறது.
டெளன்டவுன் வழித்தடத்தில் பியூட்டி வோர்ல்ட் நிலையத்திற்கும் ஹில்வியூ நிலையத்திற்கும் இடையில் பூமிக்குக் கீழே அமையும் ஹும் என்ற அந்த நிலையம் 2025ல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.