வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீட்டு விலை மிதமடைவதற்கான அறிகுறிகள் தெரியவந்து இருக்கின்றன.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலை 1.5% கூடியது. சென்ற ஆண்டில் இடம்பெற்ற 2.5% என்ற சராசரி காலாண்டு விலை அதிகரிப்பைவிட இது குறைவாக இருக்கிறது.
இருந்தாலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இடம்பெற்றதைவிட இரண்டாவது காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலை அதிகமாகக் கூடி இருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட காலத்தில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 1% தான் கூடியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை இந்த விவரங்களைத் தெரிவித்தது.
தேவைகளை மட்டுப்படுத்தும் வகையிலும் மக்கள் விவேகமான முறைகளில் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் வீவக மறுவிற்பனைச் சந்தையின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடப்புக்கு வந்தன.
அதையடுத்து மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு மிதமடைந்து இருக்கிறது.
தனியார் சொத்து உரிமையாளர்கள் மானியமற்ற வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்க 15 மாத காலம் காத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் சென்ற ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
வீவக கடன்களுக்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டன.
இதனிடையே, வீவக மறுவிற்பனை வீட்டு விலை மிதமடைந்து இருப்பதன் தொடர்பில் கருத்து கூறிய மொகல்.எஸ்ஜி என்ற நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் நிக்கோலஸ் மாக், வீவக பிடிஓ வீடுகளை 2022 முதல் அரசாங்கம் அதிகமாக கட்டித் தந்தது இதற்கு ஒரு காரணம் என்று தெரிவித்தார்.
வீவக மறுவிற்பனை வீட்டு விலை மேலும் மெதுவடையும் வாய்ப்பு இருப்பதாக பிராப்பர்டிகுரு சிங்கப்பூர் நிர்வாகி டான் டீ கூன் தெரிவித்தார்.
ஆரஞ்ச்டீ அண்ட் டை நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுத் துறையின் மூத்த துணைத் தலைவர் கிறிஸ்டின் சன், ஓரறை மறுவிற்பனை வீட்டு விலைதான் ஆக அதிகமாகக் கூடி இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இத்தகைய வீட்டின் சராசரி விலை $237,000 ஆக இருந்தது. இது ஏப்ரல், ஜூன் வரைப்பட்ட இரண்டாவது காலாண்டில் $245,000 ஆகக் கூடிவிட்டது.
அடுத்த இடத்தில் எக்ஸிகியூட்டிவ் வீடுகள் இருக்கின்றன. இவற்றின் மறுவிற்பனை விலை 2.3% கூடி $800,000லிருந்து $818,000 ஆக அதிகரித்து உள்ளது.
ஐந்தறை வீட்டு மறுவிற்பனை விலை 1.9% கூடி $650,000 ஆக விலைபோனது. நாலறை வீட்டு விலை 1.5% அதிகரித்து $545,000 ஆக இருந்தது.
ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட மூன்று மாதங்களில் 6,514 வீடுகள் கைமாறின. இது ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட மூன்று மாதங்களில் கைமாறிய 6,979 வீடுகளை விட 6.4% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.