கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மறுஉருவாக்கம்; தாக்கம் தொடர்பில் ஆய்வுகள்

கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மறுஉருவாக்கம்; தாக்கம் தொடர்பில் ஆய்வுகள்

2 mins read
2ea72887-3d02-493c-b2ed-05f027942672
கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மறுஉருவாக்கம் காரணமாக சுங்கை பூலோ, ஈரநில காட்டுப்பகுதி மீது ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கண்டறிய தனிப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒன்று நடத்தப்படும். - படம்: ஷின் மின் டெய்லி 

கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை 2034 வாக்கில் சீரமைத்து புதிதாக கட்டப்படும். அது இப்போதைய ஆலைக்கு வடக்கே புதிதாக விரிவுபடுத்தப்படும் 26 ஹெக்டர் நிலத்தில் தேசிய சுற்றப்புற வாரியத்தின் கழிவு நிர்வாக ஆலைக்குப் பக்கத்தில் அமைந்து இருக்கும்.

விரிவுபடுத்தப்படும் நிலப்பகுதி தொடர்பில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களையும் இதர விளைவுகளையும் பற்றி அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

பாதிக்கப்படக்கூடிய முன்னாள் கேடிஎம் ரயில்வேயின் ஒரு பகுதியிலும் முன்னாள் கம்போங் வாக் சிலாட்டில் இருக்கும் முஸ்லிம் இடுகாட்டுப் பகுதியிலும் மரபுடைமை ஆய்வு ஒன்றும் நடத்தப்படும்.

இந்த விவரங்கள் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் இருந்து தெரியவருகிறது. அந்த ஆவணம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த மரபுடைமை ஆய்வுகளில், வழக்கத்திற்கு மாறான கைவினை, கலைப்பொருள்கள் கண்டெடுக்கப்படும் பட்சத்தில் தொல்பொருள் ஆய்வு ஒன்றையும் நடத்த வேண்டிய தேவை ஏற்படும்.

கல்லறைகளைத் தோண்டி எடுக்கக்கூடிய சாத்தியமும் தேவையானதாக இருக்கக்கூடும் என்பதை ஆவணம் சுட்டியது.

அப்படி ஏதாவது தேவை ஏற்பட்டால் தோண்டி எடுக்கப்படும் உடல் பகுதிகள் சுவா சூ காங் இடுகாட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கு மீண்டும் புதைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டி இருக்கலாம்.

தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை மறுபடியும் உருவாக்கப்பட இருப்பதன் காரணமாக இதர பகுதிகளில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி தீர்மானிக்க தனிப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒன்றும் செய்யப்படும்.

அருகி வரும் விலங்குகள், பறவைகள் ஏதாவது பாதிக்கப்படுமா என்பதையும் அடையாளம் காணவேண்டி இருக்கும்.

ஒப்பந்தப்புள்ளியைப் பெறும் நிறுவனம், நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளையும் தெரிவிக்க வேண்டி இருக்கும்.

சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிர்வாக திட்டம் ஒன்றையும் அது உருவாக்க வேண்டி இருக்கும்.

தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை விரிவுபடுத்தப்படுவதால் மத்திய நீர்த்தேக்க வனப்பகுதிக்கும் எஞ்சிய ஒரு சதுப்பு நிலப் பகுதிக்கும் இடையில் வனவிலங்குகள் நடமாட்டத்திற்கு வசதியளிக்கும் ஒரு சுற்றுச்சூழல் பாதை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

வடகிழக்கு சிங்கப்பூரில் நியூவாட்டருக்கும் பயன்படுத்தப்பட்ட நீருக்கும் ஏற்படக்கூடிய தேவையை இப்போது உள்ள கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையும் கிராஞ்சி எம்ஆர்டிக்கு வடக்கே அமைந்து இருக்கும் கிராஞ்சி நியூவாட்டர் ஆலையும் நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் நிர்வாக முறையின் மீள்திறனை மேம்படுத்தும் வகையில் ‘மும்முனை வழிமுறையின்’ ஒரு பகுதியாக கிராஞ்சி ஆலை புதிதாக உருவாக்கப்படும் என்று கழகம் தெரிவித்து இருக்கிறது. சாங்கி, துவாஸ் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் இதர இரண்டு ஆலைகள் ஆகும்.

கிராஞ்சி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை நாள் ஒன்றுக்கு 33 மில்லியன் கேலன் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரிக்கும் ஆற்றலைக் கொண்டது.

கிராஞ்சி நியூவாட்டர் தொழிற்சாலை நாள் ஒன்றுக்கு 22 மில்லியன் கேலன் தண்ணீரை தயாரிக்கும் ஆற்றலைக் கொண்டது.

தேசிய சுற்றுப்புற வாரியம் புதிய ஆலையை கட்டம் கட்டமாக கட்டும் வாய்ப்பு இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்