பாசுமதி சாராத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. அந்தத் தடையில் இருந்து விலக்குபெறும் வகையில் இந்தியாவுடன் சிங்கப்பூர் அணுக்கமாகத் தொடர்புகொண்டு வருகிறது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்ததாக சேனல் நியூஸ் ஏஷியா (சிஎன்ஏ) குறிப்பிட்டது.
உலகின் மாபெரும் அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, உடனடி அரிசித் தடை பற்றி அண்மையில் அறிவித்தது.
இந்தியா ஏற்றுமதி செய்யும் அரிசியில் கால்வாசி, பாசுமதி சாராத வெள்ளை அரிசியாகும்.
உள்நாட்டில் அரிசி போதிய இருப்பு இருப்பதையும் விலை ஏற்றத்தைத் தடுக்கவும் தடை விதித்து இருப்பதாக இந்தியா விளக்கம் அளித்தது.
சிங்கப்பூர் இறக்குமதி செய்யும் அரிசியில், இந்தியாவின் பாசுமதி சாராத வெள்ளை அரிசி அளவு 17% ஆக இருக்கிறது என்று, தான் கேட்டதற்கு அளித்த பதிலில் உணவு அமைப்பு கூறியதாக சிஎன்ஏ தெரிவித்தது.
சிங்கப்பூர் 2022ல் இறக்குமதி செய்த அரிசியில் ஏறக்குறைய 40% இந்தியாவில் இருந்து வந்தது. சிங்கப்பூர் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்கிறது.
“பல்வேறு தரப்புகளில் இருந்து பலவகை அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் வகையில் இறக்குமதியாளர்களுடன் அணுக்கமாகத் தான் செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியா விதித்துள்ள தடையில் இருந்து விலக்கு பெற சிங்கப்பூர் அதிகாரிகள் அந்த நாட்டுடன் அணுக்கத் தொடர்பில் இருந்து வருகிறார்கள்,” என்று உணவு அமைப்பு அறிக்கையில் தெரிவித்தது.
உலகில் அரிசியை ஆக அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா. அந்த நாடு இப்போது சில வகை அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.
அரிசி இறக்குமதியை அதிகம் சார்ந்து இருக்கும் நாடுகள் இந்தியாவின் தடை காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியத் தடையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ‘குரோ இன்டலிஜன்ஸ்’ என்ற நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த நாடுகளில் உணவு விலைகள் ஏற்கெனவே தாறுமாறாக ஏறி இருக்கின்றன.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் பாசுமதி சாராத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான உலகளாவிய தேவை ஆண்டுக்காண்டு அடிப்படையில் 35% கூடியதாக இந்தியா, ஏற்றுமதி தடையை விதித்தபோது அறிவித்தது.
‘‘சிங்கப்பூரின் ஒட்டுமொத்த அரிசி இருப்பு நிலவரம் இப்போது சீராக, நிலையாக இருக்கிறது.
‘‘தேவையான அரிசியை எல்லாரும் வாங்கும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் போதுமான அரிசி கைவசம் இருக்கிறது.
‘‘ஒருவகை அரிசிக்குத் தடை ஏற்படும்போது வேறு வகை அரிசிக்கு மாறிக்கொண்டு பயனீட்டாளர்கள் நீக்குப்போக்காக நடந்துகொள்வது உசிதமானதாக இருக்கும்,’’ என்று உணவு அமைப்பு தெரிவித்து உள்ளது.