எழுத்தாளர் கழகத் தலைவருக்கு ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பட்டம்

2 mins read

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனுக்கு ‘எழுத்தாண்மை ஏந்தல்’ என்னும் பட்டத்தை வழங்கி மலேசியாவின் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் சிறப்பித்திருக்கிறது.

அவர் எழுதிய விண்ணில் வீடு கட்டி (அமீரகத்திற்கு ஓர் ஆனந்தப் பயணம்) எனும் நூலின் அறிமுக விழா கடந்த திங்கட்கிழமை ஜூலை 24ஆம் தேதி ஈப்போவில் நடைபெற்றபோது அந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

பேரா மாநில முதல்வரின் முன்னாள் மதியுரைஞரும் பேரா மாநில ம.இ.கா. தலைவருமான வ. இளங்கோ தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் பேரா மாநில ம.இ.கா. முன்னாள் தலைவரும் பேரா மாநிலத் தமிழ் மணிமன்றத் தலைவருமான கோ. இராஜூ, திரு. ஆண்டியப்பனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பட்டத்தை வழங்கினார்.

நூலாசிரியரின் வெற்றித் திருமகன் கம்ப இராமாயண நாடக நூலை ஈப்போவில் வெளியீடு செய்ததும் திரு ராஜூதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய செயலாளருமான முனைவர் அருள் ஆறுமுகம் நூலாசிரியரை அறிமுகம் செய்ய அந்த மன்றத்தின் தலைவர் கவிஞர் வி. வனிதா தினகரன் வரவேற்புரை ஆற்றினார்.

பேரா இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் முகம்மது அரிப் பின் அலியா, பேரா கிந்தா சமூக நட்புறவு மன்றத் தலைவர் திரு. நா. லோகநாதன், மிமி அமைப்பின் தலைவர் உலகத் தமிழ் மாமணி டாக்டர் தி. இராமநாயகம் ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாக நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வி. அருள்நாதன், பேரா மாநிலக் கல்வித் திணைக்களத்தின் உதவி இயக்குநர் திரு மு. அர்ச்சுணன், பேரா மாநிலத் தமிழர் திருநாள் இயக்கத்தின் தலைவர் திருமிகு கு. மாயமுத்து ஆகிய மூவருக்கும் தக்கார் சிறப்புச் செய்யப்பட்டது.

திருவாட்டி சரளாஸ்ரீ நூலாய்வு செய்ய, மக்கள் மனம் இதழாசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிறம்பானைச் சேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் திரு. கோவி.குட்டப்பன், தமிழ் நாட்டைச் சேர்ந்த மறை. திரு. தாயுமானவன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.

திரு ஓசோ முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் சுமார் 20 மாணவர்கள் கலந்துகொண்டு நூலைப் பெற்றுக்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. இறுதியில் நூலாசிரியர் ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றினார்.

படவிளக்கம் 3: நிகழ்வில் பங்கேற்றோர்.

நிகழ்ச்சியில் மன்றத்தின் துணைத் தலைவர் திரு. நாராயணன்,
பேராசிரியர் முனைவர் வி. அருள்நாதன், கோ. இராஜூ, திரு. நா.
ஆண்டியப்பன், திரு. கு. மாயமுத்து, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, மன்றத் தலைவர் கவிஞர் வி. வனிதா தினகரன், செயலர் திருவாட்டி கோமதி.
நிகழ்ச்சியில் மன்றத்தின் துணைத் தலைவர் திரு. நாராயணன், பேராசிரியர் முனைவர் வி. அருள்நாதன், கோ. இராஜூ, திரு. நா. ஆண்டியப்பன், திரு. கு. மாயமுத்து, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, மன்றத் தலைவர் கவிஞர் வி. வனிதா தினகரன், செயலர் திருவாட்டி கோமதி. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
குறிப்புச் சொற்கள்