தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்தை ஒன்றுதிரட்டும்; விழிப்புநிலையைக் கூட்டும்

3 mins read
உங்கள் பங்கு என்ன? - புதிய முழக்க வாசகத்துடன் எஸ்ஜிசெக்யூர் இயக்கம்; ஒருமித்த கவனத்தில் மாற்றம்
d530a5be-02ec-424f-a8db-f0af26c21e3a
எஸ்ஜிசெக்யூர் இயக்கம் சமூகத்தை ஒன்று திரட்டுவதிலும் பங்காளித்துவ உறவைப் பலப்படுத்துவதிலும் இளையர்களை ஈடுபடுத்துவதிலும் ஒருமித்த கவனத்தைச் செலுத்தவிருக்கிறது. - படம்: சாவ் பாவ் கோப்புப்படம்

எஸ்ஜிசெக்யூர் இயக்கத்தின் ஒருமித்த கவனம் மாறுகிறது. சமூகத்தை ஒன்று திரட்டுவதிலும் பங்காளித்துவ உறவைப் பலப்படுத்துவதிலும் இளையர்களை ஈடுபடுத்துவதிலும் அது ஒருமித்த கவனத்தைச் செலுத்தவிருக்கிறது.

சிங்கப்பூருக்குப் பயங்கரவாத மிரட்டல் தொடர்வதால் அதைச் சமாளிக்க சிங்கப்பூர் சமூகம் ஒன்று சேர்ந்து செயல்பட்டு, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளவும் ஒவ்வொருவரும் ஒரு பணியை ஆற்றவும் தேவை இருக்கும்.

எஸ்ஜிசெக்யூர் இயக்கத்தின் ஒருமித்த கவனம் மாறுவதற்கு இதுவே காரணம் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.

‘தி ஸ்டார் விஸ்டா’வில் வெள்ளிக்கிழமை நடந்த எஸ்ஜிசெக்யூர் சமூக மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

சிங்கப்பூர் மக்களில் ஏறத்தாழ பாதிப்பேர் மட்டுமே, நாடு பயங்கரவாத தாக்குதலுக்கான குறியாக இருக்கிறது என்று நம்புகிறார்கள். உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வுமூலம் இது தெரியவருகிறது.

ஆனால், உண்மையிலேயே சிங்கப்பூருக்கு பயங்கரவாத மிரட்டல் இருந்து வருகிறது. இதை மிக முக்கியமான ஒன்றாக கருதும்படி மக்களுக்கு விழிப்பூட்டுவது அதிகாரிகளைப் பொறுத்தவரை மேலும் மேலும் சிரமமாகி வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் ஏதாவது நடக்கும் என்று பலரும் கருதவில்லை. ஆகையால், அந்த மிட்டலை மிகக் கடுமையான ஒன்றாகக் கருதும்படி மக்களை இணங்கச் செய்வது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.

ஆனால், அந்த மிரட்டல் உண்மையிலேயே இருந்து வருகிறது. ஆகையால் மக்கள் இதை மிக முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடக்காமல் முன்னதாகவே தடுக்க தங்களால் ஆன அனைத்தையும் அதிகாரிகள் செய்வார்கள்.

அப்படியும் ஏதாவது ஒரு தாக்குதல் நடக்கும் பட்சத்தில் அதைத் திறம்பட கையாளவும் அவர்கள் முடிந்தவரை பாடுபடுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர், இதைப் பொறுத்தவரை சமூகம் ஒன்றிணைந்து செயல்பட்டு உதவிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும், ஒவ்வொருவரும் ஒரு பங்கை ஆற்றக்கூடிய அவசியம் இருக்கும் என்று கூறினார்.

பிரதமர் லீ சியன் லூங் 2016ல் எஸ்ஜிசெக்யூர் தேசிய இயக்கத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக தேசிய அளவில் எடுக்கப்படும் முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்படி அந்த இயக்கம் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

அந்த இயக்கத்தின் முழக்க வாசகம் மாறி மாறி இடம்பெற்று வந்திருக்கிறது.

இதுவரையில் இருந்து வந்த ‘விழிப்புடன் இருங்கள், ஐக்கியமாக இருங்கள், வலுவாக இருங்கள்’ என்ற முழக்க வாசகம், வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டது.

‘உங்கள் பங்கு என்ன?’ என்ற புதிய முழக்க வாசகம் வெள்ளிக்கிழமை மாநாட்டில் வெளியிடப்பட்டது.

பயங்கரவாதத்தை தடுப்பதில் தாங்கள் எந்தப் பணியை ஆற்ற முடியும் என்பதைக் கண்டறிய சிங்கப்பூரர்களுக்கு ஊக்கமூட்டுவது புதிய முழக்க வாசகத்தின் நோக்கம்.

சிங்கப்பூரை பாதுகாப்பானதாக வைத்திருக்க சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் என்ன பணியை ஆற்றலாம் என்பதை தீர்மானிக்க உதவும் வகையில் ஆறு வகைப் பணிகளை வெளிப்படுத்தும் புதிர்ப் போட்டியும் இடம்பெற்றது.

ஒற்றுமையாளர் - மற்றவர்கள்மீது அக்கறை கொண்டு கம்போங் உணர்வை உயிரோட்டமிக்கதாக வைத்திருக்க உதவும் ஒருவர்;

உண்மையான நண்பர் - பலவற்றையும் கண்காணித்தபடியே இருந்துகொண்டு ஒருவர் மனரீதியில் தீவிரவாதத்துக்கு உட்படும்போது அவர்மீது அக்கறை காட்டுபவர்;

செய்திகளைப் பரிசோதிப்பவர் - விழிப்போடிருந்து பொய்ச்செய்திகள் பரவாமல் தடுப்பவர்;

உயிர்க்காப்பாளர் - தேவை ஏற்படும்போது தம்முடைய அவசரகால ஆயத்த தேர்ச்சிகளுடன் செயல்படத் தயாராக இருப்பவர்;

காப்பாளர் - பேரிடர் நேரத்தில் பதற்றப்படாமல் அமைதிகாத்து மற்றவர்களை ஆபத்தில் இருந்து அப்புறப்படுத்துபவர்;

கண்காணிப்பாளர் - விழிப்புடன் இருந்து சந்தேகத்திற்கிடமான நடத்தைகளைப் பற்றி அல்லது பொருள்களைப் பற்றி உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துபவர்;

இந்தப் பணிகளில் தங்களுக்குப் பொருத்தமானதை சிங்கப்பூரர்கள் ஆற்றலாம்.

இதனிடையே, செப்டம்பரில் புதிய தொடர் எஸ்ஜிசெக்யூர் சாலைகாட்சிகளைத் தொடங்கப் போவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்காளித்துவ அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு தொடர்ந்து பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்கி, அவற்றை வலுவாக்கி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் வகையில் சமூகத்தை ஒன்றுதிரட்டப்போவதாக அமைச்சு மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்