தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வெள்ளி காசோலைகளுக்கு நவம்பரிலிருந்து வங்கிகள் கட்டணம் விதிக்கும்

3 mins read
1f41d754-0443-4a4a-b778-90b012296aed
சிங்கப்பூரின் ஏழு முக்கிய வங்கிகள் இவ்வாண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூர் வெள்ளியிலான காசோலைகளுக்குக் கட்டணம் விதிக்கத் தொடங்கும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஏழு முக்கிய வங்கிகளான சிட்டிபேங்க், டிபிஎஸ், ஹெச்எஸ்பிசி, மேபேங்க், ஓசிபிசி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட், யூஓபி ஆகியவை, இவ்வாண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூர் வெள்ளியிலான காசோலைகளுக்குக் கட்டணம் விதிக்கத் தொடங்கும்.

மற்ற வங்கிகள் 2024 ஜூலை மாதத்திலிருந்து அவ்வாறு செய்யத் தொடங்கும். அமெரிக்க டாலரிலான காசோலைகளுக்கும் படிப்படியாகக் கட்டணங்கள் விதிக்கப்படும்.

சிங்கப்பூரில் காசோலைகளின் பயன்பாடு குறைந்து வருவதால், அவற்றைக் கையாளும் செலவு அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

காசோலைகளின் பரிவர்த்தனை 2016ன் 61 மில்லியனிலிருந்து 2022ல் 19 மில்லியனுக்குக் குறைந்தது. இது கிட்டத்தட்ட 70 விழுக்காடு சரிவு.

அதே சமயத்தில் ஒரு காசோலையைக் கையாளுவதற்காகும் சராசரி செலவு 2016லிருந்து நான்கு மடங்கு அதிகரித்து 2021ல் 40 காசாக இருந்தது. காசோலைகளின் பரிவர்த்தனை மேலும் குறைந்தால், இந்தச் செலவு 2025க்குள் $6 வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தச் செலவை வங்கிகள் ஏற்பது விரைவில் சாத்தியப்படாது என்று ஆணையமும் சங்கமும் குறிப்பிட்டன.

காசோலைக்கான புதிய கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் 2025 கடைசிக்குள் நிறுவனக் காசோலைகளை முற்றாக நீக்க விரும்பினாலும், காசோலைகளைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோருக்குக் கூடுதல் கால அவகாசம் தரப்படும்.

பேநவ், ஜைரோ, மின்பணப்பை போன்ற மாற்று கட்டணமுறைகளைப் பழக்கப்படுத்திக்கொள்ள கால அவகாசம் துணைபுரியும். காசோலைகளைப் பயன்படுத்துவோர் மாற்று கட்டணமுறைகளுக்கு மாற, ஆணையமும் சங்கமும் உதவி புரியும்.

தனிநபர் காசோலைகளை முற்றாக நீக்குவதற்கான காலக்கெடுவையும் மாற்று கட்டணமுறைகளுக்கு மாறுவதற்கான உதவித் திட்டங்களையும் நிர்ணயிக்க, அடுத்த ஆண்டு மற்றொரு பொது கலந்தாலோசனை நடைபெறும்.

அதற்குள், 2025 கடைசியில் நடப்புக்கு வரவிருக்கும் மின்னியல் ஒத்திவைத்த கட்டணமுறையைப் (EDP) பொதுமக்கள் பயன்படுத்தலாம். இந்தக் கட்டணமுறை, பேநவ், ஜைரோ போன்ற நடப்பிலுள்ள கட்டணமுறைகளைப் பயன்படுத்தும்.

காசோலைகளை இன்னமும் பயன்படுத்தி வருவோர் சொத்து பரிவர்த்தனைகளுக்கே அவற்றைப் பெரும்பாலும் பயன்படுத்துவதாகச் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட முதல் கலந்தாலோசனை கண்டறிந்தது. சொத்து பரிவர்த்தனைகள் அடிக்கடி செய்யப்படுவதில்லை என்பதால், காசோலையைக் கையாளும் செலவையும் அவர்கள் ஏற்கத் தயாராக இருந்தனர்.

காசோலைகளை எழுதும்போது கூடுதல் பாதுகாப்புணர்வு கிடைப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய சிலர் கூறினர்.

அரசாங்கச் சேவை அதிகாரியான ஜாக்சன் வூ, வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற வழக்கமான தவணைக் கட்டணங்களுக்குக் காசோலை எழுதுகிறார். வழக்கமான பரிவர்த்தனைகளைத் தனது வங்கிக் கணக்குடன் இணைக்க விரும்பாததால் மின்கட்டணமுறைகளை அவர் பயன்படுத்துவதில்லை.

“இந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமான இருந்தாலும், பரிவர்த்தனையின் விவரங்கள், மின்கையொப்பம் போன்றவற்றை யாராவது அத்துமீறி திருடக்கூடிய வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

வேறு சிலருக்கு, இணையக் கட்டணமுறையின் உட்பதிவு விவரங்களை நினைவில் கொள்வது சிரமமாக இருக்கிறது.

“பொதுவாக, வயதானவர்கள் செயலிகளின் உட்பதிவு விவரங்களை ஞாபகம் வைத்திருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நேற்று என் வாடிக்கையாளர் ஒருவர் உட்பதிவு விவரங்களை மறந்துவிட்டதால் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பேநவ் கணக்கை அவரால் அமைக்க முடியவில்லை,” என்றார் காப்புறுதி முகவர் இங் வென் ஜியே. இவரும் தனது வீட்டுக்குப் பணம் கட்ட காசோலையைப் பயன்படுத்துகிறார்.

“பெரும்பாலான வங்கிகள் சிங்பாஸ் உட்பதிவை அனுமதிக்கின்றன, ஓரிரு வங்கிகள் அனுமதிப்பதில்லை,” என்றார் 33 வயது திரு இங்.

தனிநபர்களைப் போலவே, நிறுவனங்களுக்கும் இவ்வாண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூர் வெள்ளியிலான காசோலைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். அமெரிக்க டாலரிலான காசோலைகளுக்குப் படிப்படியாகக் கட்டணங்கள் விதிக்கப்படும்.

வங்கிகள் நிறுவன வாடிக்கையாளர்களுக்குக் காசோலை புத்தகங்கள் வழங்குவதை மின்னியல் ஒத்திவைத்த கட்டணமுறையின் அமலாக்கத்திற்குமுன் நிறுத்திவிடும். நிறுவனக் காசோலைகளைக் கையாளுவதை 2026 ஜனவரி 1 முதல் நிறுத்திவிடும்.

குறிப்புச் சொற்கள்