தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளில் பயிலும் மூன்றில் இரு மாணவர்கள் இணைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிக்கே விண்ணப்பம்

1 mins read
f46837ad-ce4c-43dc-b29a-4f483320d6b5
கடந்த சில ஆண்டுகளாக கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பதிந்துகொள்ளும் சிறாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொடக்கப் பள்ளிக்கே விண்ணப்பிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய மாணவர்களில் மூன்றில் இருவர் அவ்வாறு விண்ணப்பிப்பதாகக் கல்வி அமைச்சு கூறியது.

அவ்வாறு விண்ணப்பிப்போரில் 40 விழுக்காட்டினர், தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையின் முதல் கட்டமான, பள்ளி மாண­வர்­க­ளின் உடன்­பி­றந்­தோர்க்­கான சேர்க்கைமுறையின்கீழ் பதிவு செய்பவர்கள். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கல்வி அமைச்சின் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார்.

மற்ற 60 விழுக்காட்டினர் ‘2ஏ’ கட்டத்தில் பதிவு செய்கின்றனர். அக்கட்டத்தின்கீழ், கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இணைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிக்கே விண்ணப்பம் செய்தால் அதற்குத் தகுதி பெறுவர்.

2023ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கட்டம் ‘2ஏ’, ஜூலை 14ஆம் தேதி நிறைவுபெற்றது. அதில் பதிந்துகொண்ட மாணவர்களுக்கு அந்தந்த தொடக்கப்பள்ளிகளில் இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்குப் பதிந்துகொள்ளும் சிறாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமைச்சு கூறியது.

2023ஆம் ஆண்டு ஏறத்தாழ 8,000 பிள்ளைகள் கல்வி அமைச்சின் 50 பாலர் பள்ளிகளில் ‘கே1’, ‘கே2’ வகுப்புகளில் சேர்ந்தனர். 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 7,500ஆக இருந்தது.

இத்தகைய தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே செயல்படும் மேலும் பத்து பாலர் பள்ளிகளைத் திறக்க அமைச்சு திட்டமிடுகிறது.

குறிப்புச் சொற்கள்