சாங்கி விமான நிலையத்தில் சோதிக்கப்படும் 5ஜி தொழில்நுட்பம்

1 mins read
48b052fa-cac6-4853-b9f6-d01fa4a86d2b
பயணப்பைகளை ஏற்றிச்செல்லும் தானியக்க வாகனங்களை சாங்கி விமான நிலையம் சோதித்துவருகிறது. - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

சாங்கி விமான நிலையம், பயணப்பைகளைத் தானியக்க வாகனங்கள் மூலம் ஏற்றிச்செல்லும் நடைமுறையைச் சோதித்து வருகிறது.

அதேபோல், ‘எச்டி வீடியோ ஸ்ட்ரீமிங்’ எனப்படும் மேலும் தெளிவான காணொளிப் பரிமாற்றமுறை வாயிலாக விமானங்களைச் சோதனையிடும் நடைமுறையும் சோதிக்கப்படுகிறது.

சிங்டெல்லுடன் இணைந்து ஈராண்டுகளுக்கு ‘5ஜி’ தொழில்நுட்பத்தைச் சோதிக்கும் திட்டத்தின் அங்கங்களாக அவ்விரு சோதனைகளும் இடம்பெறுகின்றன.

ஒரு விமானம் புறப்படத் தயாராவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது என முன்னுரைக்கும் கணக்கீட்டை மேம்படுத்துவது அந்தச் சோதனைகளின் நோக்கம்.

விமான நிலையத்தின் சில பகுதிகளில் ‘5ஜி’ தொழில்நுட்பச் சோதனைகள் இடம்பெறுவது குறித்து, சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டன.

சோதனை முடிவுகள், சாங்கி விமான நிலையம் முழுவதும் அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டது.

‘5ஜி விமானப் போக்குவரத்துச் சோதனைத் திட்டம்’ மார்ச் 2023ல் தொடங்கியது. சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் மட்டும் அத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்