தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூனைகளை வளர்க்கவும் விற்கவும் புதிய வழிகாட்டிக் குறிப்புகள்

2 mins read
4ea8597a-9806-407d-980c-06f768c16e7e
செல்லப்பிராணியான பூனையுடன் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்: பூனைகளின் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.

வர்த்தக நோக்கத்திற்காக வளர்க்கப்படும் நாய்கள் தொடர்பாக நடப்பில் இருக்கும் நடைமுறைகள் இனி பூனைகளுக்கும் பொருந்தும். பூனைகளை வளர்ப்பதற்கும் விற்பதற்குமான தரநிலைகள் நாய்களின் தரநிலைகளோடு ஒத்து இருக்கும்.

வர்த்தக நோக்கங்களுக்காக பூனைகளை வளர்ப்பதற்கான உரிம நிபந்தனைகள் நாய்களுக்குரிய நிபந்தனைகளோடு ஒத்து இருக்கும் வகையில் விதிமுறைகளை விலங்கு மற்றும் கால்நடை சேவை அமைப்பு (ஏவிஎஸ்) அமல்படுத்தி இருப்பதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூரில் சனிக்கிழமை காலை தொடங்கிய ஆசிய பூனை கண்காட்சியில் பங்கேற்று அவர் பேசினார்.

செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கும் வெளியில் கொண்டு செல்வதற்கும் உரிய உரிம நிபந்தனைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன.

செல்லப் பிராணிகள் துறை மேற்கொண்ட மறுஆய்வின் ஒரு பகுதியாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த நிபந்தனைகள் நாய் வளர்ப்புக்கு அமல்படுத்தப்பட்டுவிட்டன.

பூனைகள் தொடர்பான புதிய விதிமுறைகள் உறைவிடம், உணவு, அவசரநிலை, விலங்கு மாற்றம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இருக்கும் என்று திரு டான் கூறினார்.

இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை செல்லப் பிராணிகளை விற்கும் கடைகளுக்கும் விற்பதற்காக வளர்ப்போருக்கும் ஏவிஎஸ் அறிமுகம் செய்யும் என்றார் அவர்.

உரிமம் பெற்ற பூனை வளர்ப்பு நிலையம் அல்லது ஏவிஎஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டோர் மட்டுமே பூனைகளை விற்க முடியும் என்பது கட்டாயமாக்கப்படும் என்றும் திரு டான் தெரிவித்தார்.

வர்த்தக நோக்கத்திற்காக பூனைகளை வளர்க்க உரிமம் அளிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை சோதிக்கப்படுவார்கள்.

நிபந்தனைகள் மீறுவது தெரிந்தால் மறுபடியும் சோதனை நடத்தப்படும்.

“வளர்க்கப்படும் பூனைகளின் நல்வாழ்வை முறைப்படுத்த இந்த விதிமுறை மாற்றம் உதவும். செல்லப் பிராணிகளை விற்கும் கடைகளில் இருந்து நல்ல நிலையிலான பூனைகளை வாங்கினோம் என்ற உறுதியை ஏற்படுத்தவும் இது கைகொடுக்கும்,” என்று திரு டான் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்