சிங்கப்பூரில் அதிக மக்கள் மூப்படைகிறார்கள். இந்தச் சூழலில் வாழ்க்கை முடிவு பிரச்சினைகளுக்கான நமது அணுகுமுறை எப்படி என்பதன் தொடர்பில் அவசர கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
நாம் எப்படி மூப்படைகிறோம், கடைசியில் எப்படி போய்ச் சேருகிறோம் என்பதன் தொடர்பிலான பல்வேறு அணுகுமுறைகளை எளிமையாக்குவது, பரவலாக்குவதன் தொடர்பில் நடந்து வருகின்ற விவாதிப்புகளில் தாதிமை விடுதிகள், அந்திமக் கால பராமரிப்பு நிலையங்கள், அந்திமக் கால வீட்டுப் பராமரிப்பு ஆகியவற்றின் பணிகளும் ஓர் அங்கமாக இடம்பெற்று இருக்கின்றன.
இதில் ஓர் அம்சம் வேறு நாடுகளில் முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறது. இருந்தாலும் சிங்கப்பூரில் இன்னமும் இந்த நிலை இல்லை.
அதுதான் கருணைக் கொலை. இது இரண்டு வகைப்படும். மருத்துவர் உதவியுடன் ஒருவர் தன் கதையைத் தானே முடித்துக்கொள்வது இதில் ஒரு வகை.
ஒருவரின் உயிரை மருத்துவர் முடித்து வைப்பது இரண்டாவது வகை.
சிங்கப்பூரில் கருணைக் கொலை சட்ட விரோதமானது. சிங்கப்பூரின் மக்கள்தொகை வேகமாக மூப்படைகிறது.
அந்திமக் கால பராமரிப்பு நிலையங்கள்கூட குணப்படுத்த முடியாத அளவுக்கு வலியால் துடிதுடித்து சாகாமல் சாகும் முதியோர் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருக்கிறது.
இவற்றை வைத்துப் பார்க்கையில் கருணைக் கொலை என்பது முற்றிலும் நிராகரித்துவிடக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. இதில் சம்பந்தப்பட்ட மக்களின் கண்ணியமும் சொந்த விருப்பமும் முக்கியம்.
தொடர்புடைய செய்திகள்
இதைப் பொறுத்தவரை பல நாடுகள் சிங்கப்பூரைவிட முன்னணியில் இருக்கின்றன. இரு வகை கருணைக் கொலையையும் பல நாடுகள் சட்டபூர்வமானதாக ஆக்கி இருக்கின்றன.
சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இரண்டாவது வகை கருணைக் கொலையை- அதாவது ஒருவரின் உயிரை மருத்துவர் முடித்து வைக்கும் நடைமுறையை சட்டவிரோதமானதாக வகைப்படுத்தி உள்ளன.
சிங்கப்பூரில் இந்த இரு விருப்ப உரிமைகளையும் அல்லது ஓர் உரிமையைச் சட்டபூர்வமானதாக்க வேண்டுமா என்றால் இதன் தொடர்பான கருத்துகள் அப்படியும் இப்படியுமாக இருக்கின்றன.
ஒருவரின் உயிரை முடிப்பதை பல சமயங்கள் ஏற்கவில்லை. சிங்கப்பூர் சமயச் சார்பற்ற நாடு. ஐந்தில் ஒருவர் எந்த சமயத்தையும் சாராதவராக இருக்கிறார்.
சிலரின் நம்பிக்கையை மற்றவர்கள் மீது திணிப்பதா அல்லது ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி தானே முடிவு எடுத்துக்கொள்ள அனுமதிப்பதா?
நம்முடைய உயிர் சமூகத்திற்குச் சொந்தமா, நம்முடைய குடும்பத்திற்கு அல்லது நமக்கு சொந்தமா?
கருணைக் கொலையைச் சட்டபூர்வமாக ஆக்கினால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்படி முற்றிய நோயாளிகளுக்குக் குடும்பத்தினர் நெருக்கம் கொடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.
சொத்துகளைப் பெறும் வகையில் பிள்ளைகள் கூட தங்கள் பெற்றோரை அப்படி நெருக்கக்கூடும் என்றும் அச்சம் நிலவுகிறது.
சிங்கப்பூர் கருணைக் கொலையைச் சட்டபூர்வமாக்க முடிவு செய்யும் பட்சத்தில் அது எந்தெந்த சூழ்நிலைகளின் கீழ் அனுமதிக்கப்படும் என்பதற்கான நிபந்தனைகளை வரையறுக்க வேண்டி இருக்கும்.
கருணைக் கொலை சட்டபூர்வமானதாக இருக்கும் நாடுகளில் இத்தகைய நிபந்தனைகள் வேறுபட்டு உள்ளன.
கருணைக் கொலை சட்டபூர்வமாக நடப்பில் இருந்து வரும் நாடுகளில் இருந்து நாம் பலவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு நன்மை, தீமைகளுக்கு இடையே எப்படி சமநிலைக் காண்பது என்பதை நமக்கு நாமே முடிவு செய்துகொள்ள வேண்டும்.
நெதர்லாந்துதான் முதன்முதலாக 2002ல் ஒருவரின் உயிரை மருத்துவர் முடித்து வைக்கும் நடைமுறையை சட்டபூர்வமாக்கியது.
கனடா இதை 2016ல் சட்டமாக்கியது. 2002ல் பெல்ஜியம் இவ்வாறு செய்தது. ஆசியாவிலோ ஆப்பிரிக்காவிலோ இதுவரை எந்த நாடும் இதைச் சட்டமாக்கவில்லை.
பொதுவாக ஆசிய நாட்டினர் மரணம் என்ற விவகாரத்தை தவிர்த்துக்கொள்பவர்கள். ஆனாலும் நாம் முதிர்ச்சியடைந்த சமூகமாக இருக்கிறோம். இந்த நிலையில், கருணைக் கொலை போன்ற விவகாரங்களை தேசிய நிலையில் குறைந்தபட்சம் நாம் விவாதிக்கவாவது வேண்டும்.
மருத்துவர்கள், சமயத் தலைவர்கள், பொதுமக்களின் கருத்துகள் திரட்டப்பட வேண்டும்.
இத்தகைய கலந்துரையாடல் இப்போது தொடங்க வேண்டும். கருணைக் கொலையைச் சட்டபூர்வமானதாக ஆக்குவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு எடுப்பதற்கு முன் இந்தப் பிரச்சினை பற்றி முற்றிலும் புரிந்துகொள்ள இது உதவும்.

