‘சமய நல்லிணக்கம் தேசிய அடையாளத்தின் ஓர் அங்கம்’

‘சமய நல்லிணக்கம் தேசிய அடையாளத்தின் ஓர் அங்கம்’

2 mins read
fc9c2cf7-df9f-4469-9445-dfa714a8d328
(இடமிருந்து) முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சமய நல்லிணக்க உன்னத விருது பெற்ற முகம்மது இர்ஷாத், திரேசா சியூ, டான் தியாம் லை, சமய நல்லிணக்க உன்னத விருது ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டாக்டர் ஹெச்.எம். சலீம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  
multi-img1 of 2

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, சமய நல்லிணக்கம் என்பது வெறும் அறிவார்ந்த யோசனையோ மனப்போக்கோ மட்டுமன்று; அது சுறுசுறுப்பான, ஒருங்கிணைந்த நடைமுறை என்று முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

அந்த நல்லிணக்கம், சமயத் தலைவர்களிடையே மட்டுமின்றி சமய அமைப்புகளின் அன்றாட நடைமுறையாகவும் இருக்கிறது என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் சிங்கப்பூர் அடையாளத்தின் குறிப்பிடத்தக்க ஓர் அங்கம் என்று அவர் தெரிவித்தார்.

திரு தர்மன் ஜூலை மாதம் 7ஆம் தேதி அரசாங்கத்தில் இருந்து விலகினார். இந்த ஆண்டு பிற்பகுதியில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

‘‘சிங்கப்பூரில் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் என்பது தேசிய அடையாளத்தின் ஒரு பகுதியாக இப்போது இருக்கிறது. சிங்கப்பூரரின் நியதியாகவும் அது திகழ்கிறது.

‘‘இத்தகைய ஒரு நாட்டில் சிங்கப்பூரர்கள் வாழ்வதற்கான சூழலை முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள்,’’ என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

ஒருவர் மற்றொருவருடன் நல்லுறவைக் கொண்டிருக்கும் வகையில் புரிந்துணர்வை மேம்படுத்தி, அனைத்து வகை மக்களுக்கும் பல்வேறு வகையான சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் உண்மையான, நடைமுறை சாத்தியமான வாய்ப்புகளை உருவாக்கித் தந்து சிங்கப்பூரர்களிடம் முதலில் தாங்கள் சிங்கப்பூரர் என்ற உணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் தேவைப்படுகின்றன என்பதை திரு தர்மன் சுட்டிக்காட்டினார்.

இளையர்களும் சமயங்களுக்கு இடையிலான செயல்திட்டங்களுக்கு ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்கிறார்கள். பொதுவான நோக்கத்திற்காக அவர்கள் பாடுபடுகிறார்கள் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

ஜாமியா சிங்கப்பூர் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு ஏற்பாடு செய்த ‘சமய நல்லிணக்க உன்னத விருது’ வழங்கும் நிகழ்ச்சியில் திரு தர்மன் உரையாற்றினார்.

அந்த நிகழ்ச்சி சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை நடந்தது.

சிங்கப்பூரில் வெவ்வேறான சமயங்களுக்கு இடையில் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்த ஆற்றிய தொண்டுகளை அங்கீகரிக்கும் வகையில் மூன்று பேருக்குத் திரு தர்மன் விருதை வழங்கினார்.

சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சமயத் தலைவர்கள் தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறார்கள் என்பதை திரு தர்மன் சுட்டிக்காட்டினார்.

இது உண்மையான ஒரு சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு நாம் அனைவரும் நன்றிகூற கடமைப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமய நல்லிணக்க உன்னத விருதைப் பெற்ற மூவரும் தங்கள் வாழ்நாளில் ஆற்றி வரும் பணிகளையும் தொண்டுகளையும் பாராட்டி அங்கீகரித்து அவர்களைத் தான் மிகவும் போற்றுவதாக திரு தர்மன் குறிப்பிட்டார்.

அவர்கள் மற்றவர்களையும் ஊக்குவித்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்