மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் தம்பதியர் திருமணம்

1 mins read
63ef1f02-908c-466d-a9ad-99ba29bd5fa2
வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள மெக்டோனல்ட்ஸ் கிளையில் திருமணம் செய்துகொண்ட எல்சன் டோங்-யோங் யோங் சிங் தம்பதியர். - படம்: மேக்சிமிலியன் லோ ஜியா யாங்

மெக்டோனல்ட்ஸ் பிரியர்களான எல்சன் டோங்-யோங் யோங் சிங் தம்பதியருக்கு எது நகைச்சுவையாக தொடங்கியதோ, அதுவே அவர்களது வாழ்வில் உண்மையிலேயே நடந்தது.

வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள மெக்டோனல்ட்ஸ் கிளை ஒன்றில் ஜூலை 19ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் 55 பேர் சுற்றம் சூழ வருகை தந்திருக்க இத்தம்பதியரின் திருமண நிகழ்வு இடம்பெற்றது.

2015ல் தொடக்கக் கல்லூரியில் சந்தித்த இவர்கள், ஏழு ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.

“நாம் மெக்டோனல்ட்சில் திருமணம் செய்துகொள்ளலாமே?” என்று திருவாட்டி யோங் முன்வைத்த யோசனை தொடக்கத்தில் நகைச்சுவையாக இருப்பதுபோல தெரிந்தாலும் பின்னர் அது செயல்படுத்தப்பட்டது.

இத்தம்பதியரின் திட்டங்களைக் கேள்விப்பட்டு அவர்களுடைய நண்பர்களும் குடும்பத்தாரும் ஆச்சரியம் அடைந்தனர்.

“என் பெற்றோர் தொடக்கத்தில் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர். பின்னர் அதை ஏற்றுக்கொண்டு எங்களது யோசனைக்கு அவர்கள் ஆதரவளித்தனர்,” என்றார் திரு டோங்.

வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருக்கும் மெக்டோனல்ட்ஸ் கிளையை கடந்த மே மாதம் தொடர்புகொண்ட திருவாட்டி யோங், வார நாளில் அங்குள்ள கூடம் ஒன்றை முன்பதிவு செய்ய அக்கிளை நிர்வாகியின் ஒப்புதலைப் பெற்றார்.

உணவுக்கும் இடத்துக்கும் மெக்டோனல்ட்சுக்கு இத்தம்பதியர் சுமார் $700 செலுத்தினர்.

“நாங்கள் விரும்பும் மக்களுடன் இல்லம்போல உணரும் ஓர் இடத்தில் திருமண வைபத்தை வைத்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்,” என்று 26 வயதாகும் இத்தம்பதியர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்