தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலோர காவல்படையினருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வசதி

2 mins read
d4405fa4-3a30-449b-82f1-72aae02b5459
கடலோரக் காவல் படையின் ஆக உயரிய சிறப்புப் பணி படைப் பிரிவினர் திறன் விளக்கக் காட்சியில் ஈடுபட்டனர். மூன்றாம் தலைமுறை சுற்றுக்காவல் கலன் ஒன்றில் இருந்து அவர்கள் சரக்குக் கப்பல் ஒன்றின் உள்ளே சென்று பிணையாளியை மீட்க ஆயத்தமாயினர்.   - படம்: சாவ் பாவ்

கடலோரக் காவல்படையினர் புதிய வகை மிரட்டல்களைச் சமாளிக்க ஏதுவாக பயிற்சி வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

அந்தப் படையின் பிரானி தலைமையகத்தில் உள்ள பிஎஸ்டி பயிற்சி நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது.

கடலோரக் காவல்படையின் ஆக உயரிய சிறப்புப் பணி படைப்பிரிவினர், அந்தப் பயிற்சி நிலையத்தில் பிணையாளி ஒருவரை மீட்கும் திறனை நேரடியாக விளக்கிக் காட்டினர்.

கப்பலில் புகுந்து தேடி மீட்கும் நடைமுறைகளை அந்தப் படையினர் வெளிப்படுத்திக் காட்டினர்.

காவல்துறை உதவி சூப்ரின்டன்டண்ட் முகம்மது காலித் அப்துல் ரஹிம், மேம்படுத்தப்பட்டுள்ள அந்தப் பயிற்சி நிலையத்திற்குப் பொறுப்பு வகிக்கும் கடலோரக் காவல் படையின் துணை அதிகாரியாவார்.

அவர் ஜூலை 24ஆம் தேதி ஊடகத்திடம் பேசினார். மிரட்டல்களும் சவால்களும் புதிது புதிதாக பரிணமிக்கின்றன.

அவற்றை எல்லாம் சமாளிக்கும் ஆற்றலுடன் திகழும் வகையில் பிஎஸ்டி பயிற்சி நிலையம் புதுப்பொலிவு பெற்று இருக்கிறது.

அது அதிகாரிகளுக்குத் தத்ரூபமான பயிற்சியை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

ஆளில்லா வானூர்திகளைச் சட்டவிரோத கடத்தல்களுக்கு அல்லது இதர குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவது போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய மிரட்டல்கள் இடம்பெறும் வாய்ப்பு இருக்கிறது என்று கடலோரக் காவல்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பிஎஸ்டி பயிற்சி நிலையம் 2006ல் கட்டப்பட்டது. அதில் இரண்டாண்டு காலம் பெரிய அளவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வந்தன. அவை 2022 மார்ச்சில் முடிவடைந்தன.

அந்தப் பயிற்சி நிலையம் சரக்குக் கப்பல் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பலதரப்பட்ட பயிற்சிகளையும் மேற்கொள்ள அதனுள்ளே வசதிகள் இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்