புளோக் 93 ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள வீவக வீட்டில் இயற்கைக்கு மாறாக 67 வயது மாது இறந்துகிடந்தது குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
சனிக்கிழமை அன்று ஒன்பதாவது மாடி வீட்டில் அவர் அசைவற்றுக் கிடந்தார். அங்கு வந்த சிங்கப்பூர் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள் அவரைப் பரிசோதித்து இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதே வீட்டில் மாதின் 70 வயது கணவர் மயங்கிக் கிடந்தார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஷின்மின் நாளேட்டிடம் பேசிய குடியிருப்பாளர் ஒருவர், ஒரு வாரமாக அந்த வீட்டிலிருந்து துர்வாடை வீசியதாக தெரிவித்தார்.
துர்வாடையைத் தாள முடியாததால் எதிர்வீட்டில் வசிக்கும் அவர் சனிக்கிழமை காலை காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
மாதின் வீட்டுக் கதவை குடியிருப்பாளரும் தட்டிப் பார்த்துள்ளார். அப்போது கதவு லேசாகத் திறந்துகொண்டது.
தரையில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
சனிக்கிழமை காலை 10.17 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. அதற்கு இருபது நிமிடங்கள் கழித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.