தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டு விற்பனையில் ஒற்றையருக்குச் சமவாய்ப்பு குறித்து ஆராயப்படுகிறது: டெஸ்மண்ட் லீ

1 mins read
27f85afe-a3ab-4e92-951f-7cc725f68880
பங்கேற்பாளர்களுடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (வெண்ணிறச் சட்டையில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையாப் பேட்டைகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை விற்பதில் ஒற்றையர்க்கும் சமவாய்ப்பு வழங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட மற்ற யோசனைகளும் ஆராயப்படும் என்றார் அவர்.

திரு லீ ஞாயிற்றுக்கிழமை ஏறக்குறைய 90 பங்கேற்பாளர்களிடம் பேசினார். வீடமைப்புத் தேவைகள், விருப்பங்கள் ஆகியவை குறித்து சிங்கப்பூரர்களிடம் கலந்துபேசுவதற்காகத் தற்போது ‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடல் நடைபெறுகிறது.

பலதரப்பட்ட ஒற்றையர்கள், இரண்டாம் முறை வீடு வாங்குவோருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் வீட்டுரிமை முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். அவர்களின் சூழ்நிலைகளும் தேவைகளும் பெரிதளவில் வேறுபடுவதைத் திரு லீ சுட்டினார்.

கலந்துரையாடல்களில் கட்டுப்படியாகும் தன்மை குறித்த அக்கறைகளும் எழுப்பப்பட்டன. வீடுகளை வாடகைக்கு எடுப்போர் சிறிது காலமானதும், அதனை வாங்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

குறைவான குத்தகைக் காலம் கொண்ட வீடுகளை வாங்குவதற்கான சாத்தியம் பற்றியும் பேசப்பட்டது. நிதி தொடர்பான காரணங்களினாலோ, நீக்குப்போக்காக இருப்பதற்காகவோ தொடக்க காலத்தில் வீட்டை வாடகைக்கு எடுக்க விரும்பும் ஒற்றையருக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரின் எதிர்காலத்தையும் சமூகக் கட்டமைப்பையும் வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து 16,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களை ஈடுபடுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்