மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கிறிஸ்டஃபர் டி சூசா, தொழில்முறை முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம், அவரை நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மூவர் அடங்கிய நீதிமன்றம் அவர் குற்றவாளி அல்லர் என்று தீர்ப்பு அளித்துள்ளது.
நாடாளுமன்ற துணை சபாநாயகரும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டி சூசா, வழக்கறிஞர் சங்கம் தனக்கு எதிராக எடுத்த ஒழுங்கு நடவடிக்கையின் முடிவைத் தீர்மானிக்கும் தீர்ப்புக்காகக் காத்திருந்தார்.
அவரது வழக்கறிஞர், சங்கம் தொடர்ந்து தவறான கருத்தை முன்வைத்து வாதிட்டுள்ளதால் லீ அண்ட் லீ சட்ட நிறுவனத்தின் பங்குதாரருமான டி சூசாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீதிபதிகள் பெலிண்டா ஆங், வூ பி லி, கண்ணன் ரமேஷ் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு, ஆதாரங்களை மறைக்க தனது கட்சிக்காரருக்கு டி சூசா உதவினார் என்பதை வழக்கறிஞர் சங்கம் சந்தேகமின்றி நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பில் கூறியிருந்தது.
2022ஆம் ஆண்டில் இரு உறுப்பினர்களைக் கொண்ட சங்கத்தின் நடுவர் மன்றம், தனது கட்சிக்காரர் நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டதை டி சூசா மறைத்துவிட்டதால் குற்றவாளியாகக் கருதியது.
ஆம்பர் காம்பவுண்டிங் பார்மஸி மற்றும் ஆம்பர் லபாரட்டரிஸ் ஆகியவற்றுக்கு அவர் வழக்கறிஞராக செயல்பட்டபோது தொழில்முறை முறைகேடு நடந்துள்ளதாக நடுவர் மன்றம் தெரிவித்திருந்தது.
ஆம்பர் நிறுவனத்தை ஆரம்பத்தில் மற்றொரு நிறுவனம் பிரதிநிதித்தது. அப்போது ஆவணங்களைத் தேட நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் பல்வேறு அதிகாரிகளிடம் அறிக்கைகளைத் தாக்கல் செய்ய உத்தரவாதத்தை மீறி சில ஆவணங்களை ஆம்பர் பயன்படுத்தியிருந்தது.
பின்னர் லீ அண்ட் லீ சட்ட நிறுவனம் இந்த வழக்கை எடுத்து நடத்தியது. திரு டி சூசா, ஆவணங்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்குமாறு ஆம்பருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத்தைப் பிரதிநிதித்த திரு மதன் அசமோல், ஆம்பர் நிறுவனம் நீதிமன்றத்திற்கு கொடுத்திருந்த உத்தரவாதத்தை மீறியிருப்பதை அறிந்தும் டி சூசா மறைத்துவிட்டதாக வாதிட்டார்.
ஆனால் இதை ஏற்காத டி சூசாவின் மூத்த வழக்கறிஞர் டான் சீ மெங், ஆவணங்களை ஆம்பர் பயன்படுத்தியிருந்ததை பிரமாணப் பத்திரம் வெளிப்படுத்தியிருந்ததை சுட்டிக்காட்டினார்.
“பிரமாணப் பத்திரம் தெளிவாகத் தயாரித்திருக்கலாம். ஆனால் தெளிவாக இல்லாததால் ஆம்பர் ஆதாரங்களை மறைக்க உதவியாகக் கருத முடியாது,” என்று திரு டான் குறிப்பிட்டார்.
திரு டி சூசா மிகுந்த நம்பகத்தன்னையுடன் செயல்பட்டதற்கு ஆதாரமாக சில மின் அஞ்சல்களையும் திரு டான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

