தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தேர்தல் தகுதிச் சான்றிதழுக்கு டான் கின் லியன் விண்ணப்பம்

2 mins read
62012599-9e4d-4e23-8616-029a94a9eb57
படம்: - டான் கின் லியன்

எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்திருப்பதாக முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியன் தெரிவித்திருக்கிறார். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது பற்றி அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

தகுதிபெறும் வேட்பாளர்களை அதிபர் தேர்தல் குழு உறுதி செய்த பிறகே, வேட்புமனு தாக்கல் செய்யலாமா என்பது பற்றி முடிவெடுக்கப் போவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் திரு டான் குறிப்பிட்டிருந்தார்.

என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான 75 வயது திரு டான், 2011ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனைகளை தான் நிறைவேற்றுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திரு டான் என்டியுசி இன்கம் நிறுவனத்தில் பணியாற்றிய கடைசி மூன்று ஆண்டுகளில், நிறுவனத்தின் பங்குதாரர் பங்குமுதல் $500 மில்லியனுக்குமேல் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினமும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெறுவார் என்றார் திரு டான்.

“மற்ற இரு உத்தேச வேட்பாளர்களான திரு ஜார்ஜ் கோ, திரு இங் கோக் சோங் இருவரும் முழு நிபந்தனைகளை நிறைவேற்றுகிறார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், சில குறைபாடுகளுக்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் அதிபர் தேர்தல் குழுவுக்கு இருப்பதை நான் அறிவேன்,” என்றார் அவர்.

அதிபர் தேர்தலுக்குத் தகுதிபெறும் வேட்பாளர்களின் பட்டியலை, வேட்புமனு தாக்கல் செய்யும் நாளுக்கு சில தினங்களுக்குமுன் அதிபர் தேர்தல் குழு அறிவிக்கும்.

வேட்பாளர்கள் தங்களது தகுதிச் சான்றிதழுடன் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும்.

தொழில்முனைவரான திரு கோ தனியார் துறை விதிமுறையின்கீழும், முன்னாள் GIC முதலீட்டுத்துறை தலைவரான திரு இங் பொதுத் துறை விதிமுறையின்கீழும் தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.

இவர்களிலும் மற்ற உத்தேச விண்ணப்பதாரர்களிலும் யாரெல்லாம் அதிபர் தேர்தலுக்குத் தகுதி பெறுகிறார்கள் என்பதை அதிபர் தேர்தல் குழு தீர்மானிக்கும்.

திரு டான் ஜூலை 11ஆம் தேதி பிரதிநிதி ஒருவர் மூலம் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.

சென்ற 2011 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களில் இவரும் ஒருவர். டாக்டர் டோனி டான், டாக்டர் டான் செங் போக், திரு டான் ஜீ சே ஆகியோருடன் போட்டியிட்ட திரு டானுக்கு ஆகக் குறைவாக 4.91 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. அவர் குறைந்தது 12.5 விழுக்காடு வாக்குகளைப் பெறத் தவறியதால், $48,000 முன்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்