உலகப் பொருளியல், அரசியல் நிச்சயமின்மைகளுக்கு மத்தியில் சிங்கப்பூரின் உற்பத்தி, சேவை துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களிடையில் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை நீடிப்பதாகத் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட காலாண்டு ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன.
இவ்வாண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை முதல் டிசம்பர் வரை தொழில் நிலவரம் மேம்படுமென்று நிறையிட்ட நிகர சராசரியாக ஆறு விழுக்காடு உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கை தெரிவித்தது.
சேவை நிறுவனங்களில், நிறையிட்ட நிகர சராசரியாக எட்டு விழுக்காடு நிறுவனங்கள் அதிக சாதகமான தொழில் நிலவரத்தை எதிர்பார்ப்பதாகப் புள்ளிவிவரத் துறையின் ஆய்வு கண்டறிந்தது.
நிறையிட்ட நிகர சராசரி என்பது நேர்மறையான, எதிர்மறையான பதில்களின் விகிதங்களுக்கு இடையிலான வேறுபாடாகும். பூஜியத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கை நம்பிக்கையைக் குறிப்பதாகக் கருதப்படும்.
உற்பத்தி நிறுவனங்களில் போக்குவரத்து பொறியியல் துறையில்தான் ஆக அதிகமாக 43 விழுக்காடு நிறுவனங்கள் 2023 இரண்டாம் பாதியில் தொழில் நிலவரம் மேம்படும் என்று எதிர்பார்க்கின்றன.
விமானப் பயணங்கள் அதிகரித்துரும் சூழலில், விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, சீரமைப்புப் பணிகளுக்கான தேவை நீடித்து நிலைக்கும் என எதிர்பார்க்கப்படுவது இதற்கு முக்கிய காரணம்.
கடல் மற்றும் கடலோரப் பொறியியல் துறை நிறுவனங்களும் தொழில் பெருக்கத்தை எதிர்பார்க்கின்றன.
பொது உற்பத்தித்துறை, உயிரியல் மருத்துவ உற்பத்தித்துறை, ரசயானத் துறை ஆகியவற்றில் தொழில் நிலவரம் குறித்த நம்பிக்கை இல்லை.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், மூன்றாம் காலாண்டில் தொழில் உற்பத்தி குறையுமென்று நிறையிட்ட நிகர சராசரியாக 25 விழுக்காடு உயிரியல் மருத்துவ உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
கொவிட்-19 சார்ந்த பொருள்கள், உயிரியல் கருவிகள், போன்றவற்றின் உற்பத்தி நிச்சயமற்ற பொருளியல் சூழலில் குறையும் என்ற எதிர்பார்ப்பு இதற்குக் காரணம்.
மின்னணுத் துறையில் நிறையிட்ட நிகர சராசரியாக 11 விழுக்காடு நிறுவனங்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொழில் நிலவரம் மேம்படும் என்று எதிர்பார்க்கின்றன.
உலகளாவிய மின்னணுத் தேவை மெதுவடைந்திருப்பதால் நுட்பத்திறன் பொறியியல் துறை பாதிப்படைந்துள்ளது. இருந்தாலும், இந்தத் துறையைச் சேர்ந்த ஏழு விழுக்காடு நிறுவனங்கள் அடுத்த ஆறு மாதங்களில் தொழில் நிலவரம் மேம்படும் என்று கணிக்கின்றன.
ஆட்சேர்ப்பை பொறுத்தவரை, முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2023 மூன்றாம் காலாண்டில் ஆட்சேர்ப்பு அதிகரிக்கும் என்று நான்கு விழுக்காடு உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
சேவைத் துறையில், 19 விழுக்காடு நிறுவனங்கள் தொழில் நிலவரம் மேம்படுமென்று நம்புகின்றன. தொழில் நிலவரம் மோசமடையும் என்று 11 விழுக்காடு நிறுவனங்கள் கணிக்கின்றன.
தங்குமிடத் துறையில்தான் ஆக அதிக நம்பிக்கை நிலவுகிறது. அதனைத் தொடர்ந்து உணவு, பானச் சேவை, நிபுணத்துவச் சேவை, போக்குவரத்து ஆகிய துறைகளில் நம்பிக்கை நிலவுகிறது.
ஆனால், மொத்த விற்பனை நிறுவனங்களிடையில் நம்பிக்கை குறைவாக உள்ளது.
நிறையிட்ட நிகர சராசரியாக, சேவைத் துறையில் பத்து விழுக்காடு நிறுவனங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
சேவைத் துறையைச் சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள், இந்தக் காலகட்டத்தில் ஆட்சேர்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன.

