பொதுத் துறையில் மார்ச் 31 வரையிலான ஓராண்டு காலத்தில் 182 தரவுச் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. முந்திய ஆண்டின் 178 சம்பவங்களைவிட இது அதிகம்.
சென்ற 2019 ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அதிகமான தரவுச் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டு வருவதாக அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் திங்கட்கிழமை வெளியிட்ட 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான அரசாங்கத்தின் தனிநபர் தரவு பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய அறிக்கை காட்டுகிறது. 2019ல் 75 புகார்கள் பதிவாகியிருந்தன.
தரவுச் சம்பவங்கள் என்பது தவறுதலாகத் தரவுகள் வெளியாகும் சம்பவங்களைக் குறிக்கிறது. இணையத்தளத்தின் செயலியக்கப் பிழையால் தரவு வெளியாகுதல், இணையத் தாக்குதலால் தரவு வெளியாகுதல், தவறானவர்களுக்குத் தரவு அனுப்பப்படுதல் போன்றவை இதில் உள்ளடங்கும்.
2022ல் புகார் செய்யப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் குறைவானது முதல் நடுத்தரமான பாதிப்புடையவை. கடந்த மூன்று ஆண்டுகளாக உயர் பாதிப்புடைய சம்பவங்கள் எதுவும் நேரவில்லை.
தேசிய பாதுகாப்பை அல்லது பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கக்கூடிய சம்பவங்களும், தொழில்களைப் பாதித்து, தனிநபர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கக்கூடிய சம்பவங்களும் உயர் பாதிப்புடைய சம்பவங்களாகக் கருதப்படும்.
இவ்வாண்டு மார்ச் 31 வரை புகார் செய்யப்பட்ட 182 சம்பவங்களில் 136 சம்பவங்கள் குறைவான பாதிப்புடையவை. அந்தச் சம்பவங்களால் அமைப்புகள், தனிநபர்கள், தொழில்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகவும் குறைவு.
நடுத்தர பாதிப்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு குறைந்து 46 ஆக இருந்தது. இந்தச் சம்பவங்களால் ஒரு பொது அமைப்புக்குச் சிரமமான அல்லது விரும்பத்தகாத விளைவுகள் நேரலாம் அல்லது பொதுமக்களுக்கு சிறிதளவு தொந்தரவு நேரலாம்.
தரவுகளைப் பாதுகாப்பதற்காகப் பொறுப்பமைப்புகள் பொது அதிகாரிகளின் விழிப்புணர்வை வளர்க்க நடவடிக்கை எடுக்கும் என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
உத்தேசத் தரவு அத்துமீறல் பற்றி தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்திடம் தனியார் அமைப்புகள் செய்த புகார்களின் எண்ணிக்கை 2022ல் 46 விழுக்காடு குறைந்து 3,600 ஆக இருந்ததாகவும் அலுவலகம் தெரிவித்தது.
“நிதியாண்டு 2022ல் தரவுச் சம்பவங்கள் சற்றே அதிகரித்ததற்கு கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய இயல்புநிலையில் அமைப்புகளிடையில் தரவுப் பகிர்வு அதிகரித்து வருவதும் மின்னிலக்கமய முனைப்பும் காரணமாக இருக்கலாம்,” என்று அலுவலகம் குறிப்பிட்டது.
“தரவுப் பாதுகாப்பின் அவசியம் பற்றி பொது அதிகாரிகளின் விழிப்புணர்வை வளர்ப்பதோடு, தரவுப் பாதுகாப்பு முறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப நடைமுறைகளும் அமலாக்கப்படும்.”
தரவுப் பாதுகாப்பு முனைப்புகள் பற்றி ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடுமாறு பொதுத் துறை தரவுப் பாதுகாப்பு மறுஆய்வுக் குழு வலியுறுத்தியதன்பேரில் அரசாங்கம் வெளியிட்ட நான்காவது அறிக்கை இது.
சென்ற 2018ஆம் ஆண்டு 1.5 மில்லியன் சிங்ஹெல்த் நோயாளிகளின் தரவுகள் அத்துமீறப்பட்ட சம்பவம் உட்பட, பல்வேறு இணையப் பாதுகாப்பு அத்துமீறல்கள் நிகழ்ந்தன. அதனைத் தொடர்ந்து, குடிமக்களின் தரவுப் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்வதற்காக 2019ல் இந்தக் குழு அமைக்கப்பட்டது.
குழு பரிந்துரைத்த 24 நடைமுறைகளில் 22 நடைமுறைகளை மார்ச் மாதக் கடைசிக்குள் அரசாங்கம் முழுமையாகச் செயல்படுத்தியிருந்தது.

