தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைத்துலக இந்திய வம்சாவளிகளின் சிறப்பை போற்றும் அமைப்பு

3 mins read
40916c78-5a7d-462f-b543-5c944ed1e54a
நிகழ்வில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி - படம்: கோபியோ சிங்கப்பூர்
multi-img1 of 3

“குடியிருப்பு அல்லாத இந்தியர்களையும் உள்ளூர் மக்கள் தொகையையும் ஒருங்கிணைப்பது இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டும்.

“அந்த இரு பிரிவினரிடையே உள்ள பந்தத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உள்ளூர் இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த உள்ளூர்வாசிகளும் குடியிருப்பு அல்லாத இந்தியர்களுடன் நல்ல உறவு முறையை வைத்துக் கொள்வது மிக முக்கியம்,” என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தனது சிறப்புரையில் வலியுறுத்தினார்.

‘கோபியோ’ எனும் இந்திய வம்சாவளியினரின் உலகளாவிய அமைப்புடைய சிங்கப்பூர் கிளையின் 21ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மூன்றாவது முறையாகக் கலந்து கொண்டார் அமைச்சர் இந்திராணி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே தொழில்முறை, கலாசாரம் மற்றும் சமூக நலன்களை ஊக்குவிக்க முற்படுகிறது இந்த அரசு சாரா அமைப்பு.

உலகமெங்கும் இருக்கும் இந்திய புலம்பெயர்ந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் செயல்பட்டு வரும் இந்த அமைப்பானது சிங்கப்பூர் உட்பட மொத்தம் 19 நாடுகளில் செயல்படுகிறது. அமைப்பின் அனைத்துலக தொழில் மன்றத்தைப் பற்றி தனது உரையில் குறிப்பிட்ட அமைச்சர், இந்திய வம்சாவளியினரிடையே வணிகத் தொடர்புகளை அறிமுகப்படுத்துவதும், அவர்களுக்கு வணிக மாநாடுகளை ஏற்பாடு செய்வதும் ஒரு பாராட்டத்தக்க முயற்சி என்றார்.

கோபியோ அமைப்பின் அனைத்துலக இளையர் பிரிவு இளம் கோபியோ தலைவர்களையும் இந்திய வம்சாவளி தலைவர்களையும் உருவாக்கும் முயற்சிகளை எடுத்துள்ளது. இந்தியாவில் வேரூன்றி இருக்கும் இளையர்களின் நன்மைக்காக உலகளாவிய வளங்களை அவர்கள் எளிதாக அணுகி பயன்படுத்தும் வாய்ப்புகளை வழங்கும் இளையர் பிரிவையும் அமைச்சர் வாழ்த்தினார்.

இக்காலத்து இளையர்களுக்கு ஓர் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முக்கிய பங்காற்றிய கோபியோ அமைப்பு சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தோடு கைகோத்து இந்திய வம்சாவளி இளையர்கள் நம் சமூகத்துடன் ஒன்றுசேர பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதை தனது உரையில் சுட்டிய அமைச்சர் மேலும் இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என ஊக்குவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்தள மன்றத்தில் இடம்பெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கிட்டத்தட்ட 500 பேர் வருகை புரிந்திருந்தனர். பல இந்திய அமைப்புகளைச் சேர்ந்த கலைஞர்களின் ஆடலும் பாடலும் நிறைந்த கொண்டாட்ட விழாவில், நம் சமுதாயத்திற்குத் தொண்டாற்றிய நான்கு இந்திய தலைவர்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்தது.

கோபியோ சிங்கப்பூர் அமைப்பின் தலைவரான ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, “ஆண்டு முழுவதும் கோபியோ அமைப்பு சிங்கப்பூர் மட்டுமல்லாது அனைத்துலக இந்தியர்களின் கலாசார மரபை ஊக்குவிக்கும் நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இந்திய வம்சாவளியினர் உலகமெங்கும் 30 மில்லியன் எண்ணிக்கையில் பரந்து காணப்படுகின்றனர். பல துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, புத்தாக்க திறன், நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இந்த முக்கியமான நாளில் நாம் தொடர்ந்து வெற்றியுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும், என்று தெரிவித்தார்.

கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுத் தலைவரான ஷேக் ஃபக்ருதீன் எஸ். அலி, “இந்த 21 ஆண்டுகளில் நாங்கள் பல சவால்கள், பாடங்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றைச் சந்தித்துள்ளோம். பல பின்னணிகள், குரல்கள் ஆகியவற்றின் பிரதிநிதித்துவமாக இருக்கிறோம். ஏற்பாட்டுக் குழுத் தலைவராக நம் சமூகத்தின் வெற்றிக்குத் துணையாக இருந்தவர்களை போற்றும் நிகழ்வாக அமையவேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது,” என்று கூறினார்.

கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான 37 வயது பாரதி செல்வன் பரமசிவம், பாரதியார் பேச்சாளர் மன்றத்தின் பிரிவு இயக்குநராக இருக்கிறார். ஏழு ஆண்டுகளாக மன்றத்தில் இருக்கும் அவர், “கோபியோ சிங்கப்பூர் நம் இந்தியர்களுக்காக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இன்று நான் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்,” என்று பகிர்ந்து கொண்டார்.

குறிப்புச் சொற்கள்