காற்பந்தாட்டத்தின்போது திடீரென மயக்கமுற்று மரணமடைந்த மணிமாறன்

காற்பந்தாட்டத்தின்போது திடீரென மயக்கமுற்று மரணமடைந்த மணிமாறன்

3 mins read
2c670eaf-478d-47d4-aa09-6ef3b30f69bb
நான்கு மாத பெண் குழந்தை மாயவர்ஷினியை விட்டுப் பிரியும் திரு மணிமாறன் அசோக்குமார், 33. - படம்: பட்டு

நண்பர்களிடையே கலகலப்புடன் தொடங்கிய மாலைப்பொழுது காற்பந்தாட்டம், 33 வயது மணிமாறன் அசோக்குமாரின் எதிர்பாரா மரணத்தால் கண்ணீரும் கம்பலையுமாக முடிந்தது.

கோவன் விளையைாட்டு மையத்தில் ஜூலை 29ஆம் தேதி கிட்டத்தட்ட 15 பேருடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, களைப்பினால் ஓர் ஓரமாக இளைப்பாறச் சென்றார் திரு மணி. அப்போது அவர் திடீரென மயக்கமடைந்து சாய, அவர் அசைவின்றிக் கிடைந்ததைக் கண்ட நண்பர்கள் உடனே மருத்துவ உதவி கோரி அழைத்தனர்.

60 ஹவ்காங் ஸ்திரீட் 21லிருந்து இரவு 8.50 மணியளவில் உதவிகேட்டு அழைப்பு வந்ததாகவும் அதன்பின் திரு மணி செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. மருத்துவமனையில் திரு மணியின் உயிர் பிரிந்தது.

திரு மணியின் அகால மரணத்திற்கு மாரடைப்பே காரணம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதுவரை அவருக்கு மாரடைப்பு நேராதபோதும் திரு மணிக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்ததாக அவரது தங்கை காயத்திரி, 28, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“இருந்தபோதும், என் அண்ணன் கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையைத்தான் பின்பற்றி வந்தார். உடற்பயிற்சியையும் உடல்நலப் பரிசோதனைகளையும் அவர் அடிக்கடி செய்வார்,” என்று நிதி நிர்வாகியாகப் பணியாற்றும் குமாரி காயத்திரி கூறினார்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 33ல் திரு மணியின் சவப்பெட்டியை உறவினர்கள் தூக்கிச்செல்கின்றனர்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 33ல் திரு மணியின் சவப்பெட்டியை உறவினர்கள் தூக்கிச்செல்கின்றனர். - படம்: பட்டு

புதிய வேலையில் ஓராண்டாக இருந்து அங்கு நல்ல பெயர் பெற்ற திரு மணி, நான்கு மாதங்களுக்குமுன் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார்.

தெம்பனிஸ் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடி வீட்டில் பெற்றோர்கள், இரண்டு தங்கைகள், இரண்டு செல்லப்பிராணிகள் என எல்லாருடனும் வாழ்ந்து அன்புகாட்டி அரவணைத்தவர் திரு மணி என்று அவரது மைத்துனர் கிருஷ்ணா, 29, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு திரு மணியின் மூத்த தங்கையை திருமணம் செய்து, இரு வாரங்களுக்குமுன் புதிதாகக் குழந்தையை வரவேற்றுள்ள நிலையில், அவரது திடீர் மரணம் தங்கள் அனைவரின் நெஞ்சங்களைத் துளைத்திருப்பதாகக் குத்துச்சண்டைப் பயிற்றுவிப்பாளரான திரு கிருஷ்ணா கூறினார்.

திரு மணி உயிர்நீத்ததற்குமுன் அவருடன் காற்பந்து விளையாடிக்கொண்டு இருந்தோரில் ஒருவரான நவின், 31, அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. திரு மணியின் மரணம் கண்மூடித் திறப்பதற்குள் நேர்ந்ததுபோல இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

திரு மணி கடந்த ஓராண்டிற்கு முன்னர்தான் வேலையில் சேர்ந்திருந்தாலும் வேலையிடத்தில் அவரது பண்புக்காகவும் வேலையிடத் திறமைக்காகவும் அவரைப் பிடித்துப்போனதாக இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவரது வேலையிட மேலதிகாரி ஜெரல்டின் சின் கூறினார்.

“மானியங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த திரு மணி, வேலையில் சிக்கல்கள் பல இருந்தபோதும் அவற்றைத் திறம்பட முடிப்பதில் கெட்டிக்காரர்,” என்று அவர் புகழ்ந்தார்.

சிண்டா, நற்பணிப் பேரவை ஆகிய அமைப்புகளில் தொண்டாற்றியதுடன் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகவும் கடந்த 11 ஆண்டுகளாகவும் அவர் செயலாற்றி வந்தார்.

நாட்டின்மீது உண்மையான பற்றை வைத்திருந்த திரு மணி, அமைதியாகவே செயல்பட்டு மக்களுடன் உறவாடி எல்லாரையும் ஊக்கப்படுத்தியதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் பால் தம்பையா, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“அவர் நம்மைவிட்டு பிரிவது குறித்து ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம். அவரது குடும்பத்தினருடன் துயரினில் பங்குகொள்கிறோம்,” என்று டாக்டர் பால் தம்பையா கூறினார்.

குறிப்புச் சொற்கள்