நிலையற்ற மின்சாரக் கட்டணங்களிலிருந்து பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பளிக்க, மின்சார விற்பனையாளர்களுக்கு அதிக கண்டிப்பான விதிமுறைகள் திங்கட்கிழமை நடப்புக்கு வந்தன.
புதிய விதிமுறைகளின்கீழ், மின்சார விற்பனையாளர்கள் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யும்போது அல்லது உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, குறைந்தபட்சம் $1 மில்லியன் முற்றிலும் செலுத்தப்பட்ட மூலதனம் வைத்திருக்கவேண்டும். இந்த நிறுவனங்கள் நம்பகமாக இருப்பதையும், போதிய நிதி வைத்திருப்பதையும் உறுதிசெய்வது இதன் நோக்கம் என்று எரிசக்தி சந்தை ஆணையம் தெரிவித்தது.
அதோடு, தலைமை நிர்வாக அதிகாரி போன்ற முக்கிய பதவி நியமனங்களுக்கும் மின்சார விற்பனையாளர்கள் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.
பொது கலந்தாலோசனைக்குப் பிறகு புதிய விதிமுறைகளை ஆணையம் அறிவித்தது.
சென்ற 2021ஆம் ஆண்டு, ஆறு மின்சார விற்பனையாளர்கள் சந்தையிலிருந்து வெளியேறினர். மேலும் இரு நிறுவனங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே ரத்து செய்ததால், பயனீட்டாளர்கள் சிலர் வேறு விற்பனையாளரை அவசரமாகத் தேடவேண்டிய நிலைக்கு உள்ளாயினர்.
சிக்கப்பூரில் 2018 முதல் வீடுகளும் சிறு தொழில் நிறுவனங்களும் மின்சார விற்பனையாளர்களிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், 2021 கடைசியில் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி நிலையால், சிங்கப்பூரின் மின்சார மொத்த விற்பனை சந்தையில் மின்சாரத்தின் மொத்த விற்பனைக் கட்டணங்களில் நிலையின்மை ஏற்பட்டது. அது மின்சார சில்லறை விற்பனை சந்தையையும் பாதித்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
மின்சார ஒப்பந்தங்கள் முன்கூட்டியே ரத்து செய்யப்பட்டதால் சில பயனீட்டாளர்கள் உயர் கட்டணத்தில் மின்சாரம் வாங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதை ஆணையம் சுட்டிக்காட்டியது. புதிய விதிமுறைகளின்கீழ், பயனீட்டாளர்கள் பணம் கட்டத் தவறாத வரை அல்லது ஒப்பந்தத்தை மீறாத வரை, மின்சார விற்பனையாளர்கள் தாங்களாக ஒப்பந்தத்தை ரத்து செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சந்தையிலிருந்து வெளியேறிய எட்டு மின்சார விற்பனையாளர்களும் சுமார் 9 விழுக்காடு மின்சாரப் பயனீட்டாளர்களுக்கு மின்சாரம் விநியோகித்தன. அவர்களில் சிலர் எஸ்பி குழுமத்திற்கு மாற்றப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது நடப்பிலுள்ள 10 தனியார் மின்சார விற்பனையாளர்களுடன் சுமார் 40 விழுக்காடு பயனீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் வைத்துள்ளனர்.