ராயல் கரீபியன் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ என்ற உல்லாசப் பயணக் கப்பலில் இருந்து பயணி ஒருவர் சிங்கப்பூர் நீரிணையில் கடலில் விழுந்துவிட்டார்.
இதை சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.
அவரைத் தேடி மீட்பதற்கான முயற்சிகளை இந்த ஆணையத்தின் கடல்துறை மீட்பு ஒத்துழைப்பு நிலையம் மேற்கொண்டு வருகிறது. பயணி ஒருவர் கடலில் விழுந்துவிட்டது பற்றி திங்கட்கிழமை காலை 7.50 மணியளவில் அந்த நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
அந்த உல்லாசக் கப்பல் சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்தது.
காணாமல் போய்விட்ட பயணியைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
தகவல் கிடைத்த உடனேயே அந்தப் பயணியைத் தேடும்படி சிங்கப்பூரின் நீரிணையில் வந்து கொண்டிருந்த கப்பல்களையும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்களையும் இந்த நிலையம் உடனடியாகக் கேட்டுக்கொண்டது.
அந்தக் கப்பல் பிற்பகல் 4.30 மணிக்கு சிங்கப்பூரைவிட்டு புறப்பட்டுச் சென்றதாக ஆணையம் இரவு 11 மணிக்கு வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
அந்த ஆணையம் அதற்கு முன் இரவு 9 மணிக்கு ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
உல்லாசக் கப்பல் சிங்கப்பூரில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் புலன்விசாரணையில் ஆதரவு அளித்து வந்ததாகவும் முந்தைய செய்தி குறிப்பிட்டது.
ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனம், இரவு 10.30 மணிக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதிகாரிகள் அந்த உல்லாசக் கப்பலுக்கு அனுமதி வழங்கிவிட்டதாகவும் அது திட்டமிட்டப்படி திங்கட்கிழமை மாலையில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
ராயல் கரீபியன் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த ஒரு தகவலைப் பார்க்கையில், அதில் தோக்கியோவுக்கு 12 இரவுகளை உள்ளடக்கிய ஓர் உல்லாசக் கப்பல் பயணம் பற்றிய தகவல் இருந்தது. அந்தப் பயணம் ஜூலை 31ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் வியட்னாம், ஹாங்காங் துறைமுகங்களில் கப்பல் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மரீன் டிராஃபிக் என்ற கப்பல் கண்காணிப்பு இணையத்தளத்தைப் பார்த்தபோது அந்த உல்லாசக் கப்பல் இரவு 10.30 மணி அளவில் வியட்னாமை நோக்கிச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
பயணி கடலில் விழுந்த தகவல் தெரிந்ததுமே அவரைத் தேடி மீட்க அந்த உல்லாசக் கப்பல் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டதாக ராயல் கரீபியன் தெரிவித்தது.
காணாமல் போய்விட்ட பயணியின் குடும்பத்தினருக்கு நிறுவனத்தின் குழு உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.