தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய தின அணிவகுப்பு: பாடாங்கைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

2 mins read
d01887cb-ac0d-43f7-9595-0291ddebead3
சிறப்பு மண்டலத்திற்குள் நுழையும் வாகனங்களையும் தனிப்பட்டவர்களையும் காவல்துறையினர் பரிசோதிப்பார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் தேசிய தின அணிவகுப்பு ‘மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய சிறப்பு நிகழ்ச்சி’ என்று பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அந்த அணிவகுப்பு நடக்கவுள்ள பாடாங்கிற்கு அருகே உள்ள பகுதியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.

அந்தப் பகுதிக்குள் செல்லும் தனிப்பட்டவர்களைக் காவல்துறை அதிகாரிகள் சோதிப்பார்கள். அவர்கள் வாகனங்களையும் சோதிப்பார்கள். சிறப்பு நிகழ்ச்சி மண்டலத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.

காவல்துறையின் சோதனைகள் இம்மாதம் 9ஆம் தேதி முழு நாளும் நடக்கும் என்று செவ்வாய்க்கிழமை காவல்துறை அறிவித்தது.

சைனாடவுன், ஃபோர்ட் கேனிங் பார்க் ஆகியவை மேம்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடப்பில் இருக்கும் பகுதிகளில் உள்ளடங்கும்.

சன்டெக் சிட்டி, எஸ்பிளனெட் ஆகியவற்றுக்கு அருகே உள்ள பகுதிகள் உட்பட அணிவகுப்பு வட்டாரத்திற்குள் அமைந்து இருக்கும் சிறப்பு மண்டலத்தில் கடுமையான சோதனைகள் இடம்பெறும்.

அந்தச் சிறப்பு மண்டலத்திற்குள் இருக்கக்கூடிய அல்லது அந்த மண்டலத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்களையும் தனிப்பட்டவர்களையும் காவல்துறையினர் பரிசோதிப்பார்கள்.

அந்தப் பகுதியில் இருந்து தேவைப்பட்டால் யாரையும் வெளியேற்றும் அதிகாரம் காவல்துறையினருக்கு இருக்கும்.

அதேபோல, அந்தப் பகுதிக்குள் செல்வதற்கான அனுமதியை ரத்து செய்யும் அதிகாரமும் காவல்துறைக்கு இருக்கும்.

ஆளில்லா வானூர்திகள், ஒலிபெருக்கிச் சாதனங்கள், சுடரொளிச் சாதனங்கள் போன்றவை அந்தப் பகுதிக்குள் தடை செய்யப்படும்.

அத்தகைய பொருள்களை யாராவது வைத்திருந்தால் அவர்கள் கைதுசெய்யப்படலாம். ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பானால் $20,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரைப்பட்ட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் அவருக்குத் தண்டனையாகக் கிடைக்கக்கூடும்.

அந்தப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படும்.

அனுமதி இல்லாமல் சிறப்பு நிகழ்ச்சி பகுதிக்குள் ஆளில்லா வானூர்தியைக் கொண்டு வருவதும் பறக்கவிடுவதும் குற்றம்.

இந்தக் குற்றத்தைச் செய்வோருக்கு $20,000 வரை அபராதம், 12 மாதம் சிறை அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கக்கூடும். ஆளில்லா வானூர்தியும் பறிமுதலாகும்.

இந்த ஆண்டின் தேசிய நாள் அணிவகுப்பையொட்டி காவல்துறை அதிகாரிகள் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் மீறாமல் அவற்றுக்கு இணங்கி நடந்துகொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிறப்பு மண்டலத்திற்குள் அல்லது சிறப்பு நிகழ்ச்சி பகுதிக்குள் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏதேனும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்து இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்