தன் நிறுவனத்திற்கு 18 ஆண்டுகாலம் விசுவாசமாக இருந்து வந்த பெண் ஊழியர் ஒருவர், நிறுவனத்திலிருந்து திருடுவதற்குத் திட்டம் போட்டார்.
‘எஸ்டி மைக்ரோஎலக்ட்ரானிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த லீ ஐ ரேன், 59, என்ற அந்த மலேசிய மாதுக்கு திங்கட்கிழமை ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் 3 கிலோவுக்கும் அதிக எடையுள்ள தங்கத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து திருடினார்.
திருட்டுத் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். திருட்டுத் தொடர்பான மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த நிறுவனத்தில் கணினிச் சில்லுகளுக்கு முலாம் பூசுவதற்காக தங்கம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தங்க முலாம் பூசும் இயந்திரத்தை இயக்கும் வேலையை அந்த மாது செய்து வந்தார் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
அந்த நிறுவனத்திடம் அதே போன்று ஐந்து இயந்திரங்கள் இருக்கின்றன. அவை 24 மணி நேரமும் இயங்கும். மாறி மாறி ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள்.
இயந்திரம் 800 சில்லுகளுக்குத் தங்க முலாம் பூசிய பிறகு இயந்திரத்தை இயக்கும் நிபுணர் தரப் பரிசோதனையை நடத்துவார்.
அப்படிப் பரிசோதனை நடத்தப்பட்ட சில்லுகள் தங்கப் படிவத்தை அகற்றுவதற்காக வேறொரு துறைக்கு அனுப்பப்படும்.
அந்த நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த டாங் லிங் என்ற பெண்மணியும் வேலை பார்த்தார்.
தங்க முலாம் பூசுவதைப் பரிசோதிக்கும் நடைமுறையில் இருந்து பணம் சம்பாதிக்கலாம் என்று லீக்கு அந்தச் சக ஊழியர் யோசனை தெரிவித்தார்.
கணினிச் சில்லுகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக முலாம் பூசினால் அவற்றில் அதிகமாகத் தங்கம் படியும். அதைச் சுரண்டி எடுத்துக்கொள்ளலாம். பிறகு அதை விற்றுவிடலாம் என்று அந்த சகஊழியர் யோசனை கூறினார்.
இதைப் பரிசோதித்து பார்த்த லீ அதில் உண்மை இருப்பதாகத் தெரிந்துகொண்டார்.
அந்த இருவரும் 2019 ஜனவரி 3ஆம் தேதிக்கும் 2021 ஏப்ரல் 29ஆம் தேதிக்கும் இடையில் தங்கள் திட்டங்களை அரங்கேற்றினர்.
லீ 2019ல் ஏறக்குறைய 1.7 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை இப்படி திருடினார். அடுத்த ஆண்டில் ஏறக்குறைய 2 கிலோகிராம் தங்கத்தைச் சட்டவிரோதமான முறையில் அவர் எடுத்துக்கொண்டார்.
மொத்தத்தில் லீ இரண்டாண்டு காலத்தில் $286,110 மதிப்புள்ள தங்கத்தை திருடியதாகக் கூறப்படுகிறது.
லீக்கு அந்த நிறுவனத்தில் $1,653 ஊதியம் கொடுக்கப்பட்டது. அந்தச் சதித்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை லீக்கு அந்தச் சக ஊழியரிடம் இருந்து $5,000 முதல் $6,000 வரை கிடைத்து வந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், 2021 ஏப்ரலில் சில்லுகளில் இருந்து இலேசான தங்கப் படலங்கள் பெயர்ந்து வருவதைக் கண்ட மற்றோர் இயந்திர இயக்குநர், அது பற்றி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார். பிறகு எல்லாம் அம்பலமானது.
ஆனால், சகஊழியரான டாங் அதற்கு முன்பே சீனாவுக்குப் போய்விட்டார். அவருக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

