அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் தனது குடியிருப்பாளர், வாடகைதாரர்களுக்கான சேவை, பராமரிப்புக் கட்டணத்தை அடுத்த ஓராண்டுக்குள் இரண்டு முறை உயர்த்துகிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
குடியிருப்பாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இது பற்றி நகர மன்றம் தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. அதில், எதிர்பாராத பணவீக்கம், அதிகரித்துள்ள செலவுகள் காரணமாக மாதாந்திர சேவை பராமரிப்புக் கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் கட்டண உயர்வு விவரம் குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும். சேவை, பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குபவர்கள் தங்களுடைய எம்பியிடம் அல்லது நகர மன்ற அலுவலகத்திடம் உதவி கோரலாம் என்று எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி பராமரிக்கும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஆளும் மக்கள் செயல் கட்சியின் கீழ் செயல்படும் நகர மன்றங்கள் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து சேவை, பராமரிப்புக் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறியிருந்தது. இதையடுத்து அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றம், மசெக நகர மன்றங்கள் ஆகியவற்றின் இரண்டாவது கட்டண உயர்வு, 2024ல் ஜூலை 1ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.
பாட்டாளிக் கட்சியும் மக்கள் செயல் கட்சியும் செலவுகள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளன.

