நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்கள் தனிப்பட்ட நடத்தையில் விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும். கடமை தவறாமல் நடந்துகொள்ள வேண்டும்.
தங்கள் சகாக்களோடும் அவர்கள் அப்படியே நடந்து கொண்டு, தங்கள் செயலுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, பயமின்றி உண்மையை உரைப்பவர்களாக அவர்கள் திகழ வேண்டும் என்று புதிய நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்கள்தான். அவர்கள், உடல் அளவில் மட்டுமன்றி உணர்வுப்பூர்வமான, நன்னெறிகள் தொடர்பிலான பலவீனங்களையும் கொண்டவர்கள்தான் என்பதையே அண்மைய சம்பவங்கள் காட்டி இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
“விதிமுறைகளை உருவாக்கும் ஆக உயரிய அமைப்பின் உறுப்பினர்கள் என்ற முறையிலும் அதேபோன்று அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் என்ற முறையிலும் நம்மை ஆட்சிபுரியும் நடத்தை நியதிகளை, விதிமுறைகளை ஒட்டித்தான் இதைச் சொல்கிறேன்,” என்று திரு சியா கூறினார்.
பிரதமர் லீ சியன் லூங், புதிய நாடாளுமன்ற நாயகராக திரு சியாவை ஜூலை 21ஆம் தேதி பரிந்துரைத்து இருந்தார்.
நாடாளுமன்ற நாயகராக பணியாற்றிய டான் சுவான்-ஜின், தெம்பனிஸ் குழுத் தொகுதி உறுப்பினர் செங் லி ஹுய் இருவருக்கும் இடையில் தகாத உறவு இருந்ததை அடுத்து இருவருமே பதவி விலகினர்.
திரு டான் விலகியதை அடுத்து நாடாளுமன்ற நாயகர் பதவி காலியாக இருந்து வந்தது.
திரு சியா 11வது நாடாளுமன்ற நாயகராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
மன்றத்தின் தலைவியான குமாரி இந்திராணி ராஜா, நாயகர் பதவிக்குத் திரு சியாவை முன்மொழிந்தார்.
அதை ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் திருவாட்டி டெனிஸ் புவா வழிமொழிந்தார்.
உறுப்பினர்களின் தொகுதியும் தாங்கள் ஆற்றும் சேவையும் தங்களுக்கு அப்பாலும் நீண்ட நெடுங்காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதை உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது.
ஆகையால் தங்கள் பதவியைக் கண்ணியத்துடன் கடைமை உணர்வுடன் ஆற்ற வேண்டியதன் அவசியத்தை அவர்கள் நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்பதை திரு சியா நினைவுபடுத்தினார்.
மன்றத்தில் காரசாரமான விவாதம் நடக்கும்போதும்கூட நாடாளுமன்றத்தின் மாண்புக்கு ஏற்ப ஆக உயரிய தரங்களையும் நடத்தையையும் உறுப்பினர்கள் கட்டிக்காப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அதையே காண தான் விரும்புவதாகவும் திரு சியா குறிப்பிட்டார்.
மன்றத்தில் திட்டவட்டமான உறுதியுடன் உணர்வுகளை வெளிப்படுத்தும் அளவுக்கு உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதேவேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை அவர் சுட்டினார்.
“என் கடமைகளை பாரபட்சமின்றி உறுதியாக, நியாயமாக நிறைவேற்றுவேன். நாடாளுமன்ற அலுவல்கள் முறையாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துவேன்.
“சிங்கப்பூர் மக்களுக்குச் சேவையாற்றுவதே பொதுவான நமது குறிக்கோள். அதைச் சாதிக்க என்னால் முடிந்தவரை பாடுபட உறுதிபூண்டுள்ளேன்,” என்று புதிய நாடாளுமன்ற நாயகர் தெரிவித்தார்.

