தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதுகாப்பு உறுதியாகும்வரை பாதிக்கப்பட்ட கட்டடங்கள் மூடப்பட்டிருக்கும்

1 mins read
7c4807b9-11c2-463a-b98e-71961643bebb
கேலாங் கடைவீட்டில் தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து அதன் பாதுகாப்பு மதிப்பிடப்பட்ட பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படங்கள்: வாசகர்களால் வழங்கப்பட்டவை

கேலாங் கடைவீடு ஒன்று திங்கட்கிழமையன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து அது தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று புதன்கிழமையன்று கட்டட, கட்டுமான ஆணையம் (பிசிஏ) தெரிவித்தது.

சுற்றியுள்ள கடைவீடுகளில் இருக்கும் சுமார் 30 பேரும் தீச்சம்பவத்தின்போது வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முன்னதாக தெரிவித்தது.

லோரோங் 27, கேலாங்கிலுள்ள 59B, 61B ஆகிய இரண்டு கடைவீடுகளின் மூன்றாம் மாடியில் இருந்த மரக்கூரை அமைப்புக்குத் தீச்சம்பவத்தால் சேதம் ஏற்பட்டுள்ளதைப் பொறியாளர்கள் கண்டுபிடித்திருப்பதாகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

“கட்டடங்களை மூடுமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு பிசிஏ உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நிபுணத்துவப் பொறியாளர் ஒருவரை நியமித்துக் கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆழமான விசாரணை ஒன்றை அவர் நடத்தி தேவையான சீரமைப்புப் பணிகளைப் பரிந்துரை செய்ய வேண்டும்,” என்றார் பேச்சாளர்.

இந்தச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பாதிக்கப்பட்ட கட்டடங்கள் மூடப்பட்டிருக்கும் என்றார் அவர்.

இதற்கிடையே, மனிதவள அமைச்சு மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டிருந்த வீடுகளில் நெரிசல் இருந்ததற்கான அறிகுறி இல்லை என்று கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களை அவர்களின் முதலாளிகள் உடனடியாக வேறு இடத்தில் தங்கவைத்துவிட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

நெருப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்