நிரந்தரவாசிகள் மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க 6 மாத கால அவகாசம் கிடைக்கலாம்

1 mins read
48a0c73a-f1a7-4ac2-b541-b740191b3862
நிரந்தரவாச உரிமை பெற்றிருக்கும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும்போது அவருடைய மறுநுழைவு அனுமதி காலாவதியாகிவிட்டால் அவருடைய நிரந்தரவாச உரிமையும் தானாகவே பறிபோய்விடும். அதை மீண்டும் பெற அவருக்கு இப்போது ஒரு மாத கால அவகாசம் தான் உண்டு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நிரந்தரவாசிகள், தங்களுக்கான மறுநுழைவு அனுமதி காலாவதியான பிறகு அந்த அனுமதியை மீண்டும் பெற விண்ணப்பிக்க இனிமேல் ஆறு மாத கால அவகாசம் இருக்கும்.

இப்போது இந்தக் கால அவகாசம் ஒரு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநுழைவு (திருத்த) மசோதாவில் பல மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றுள் இது ஒன்றாகும்.

இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கான திருத்தங்களை முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்தார்.

நிரந்தரவாசிகள் எல்லாரும் வெளிநாடு செல்லும்பட்சத்தில் செல்லுபடியாகக்கூடிய மறுநுழைவு அனுமதி இருந்தால்தான் மீண்டும் சிங்கப்பூருக்குள் அவர்கள் வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய சட்டப்படி, நிரந்தரவாசி ஒருவர் வெளிநாட்டில் இருக்கும்போது அவருடைய மறுநுழைவு அனுமதி காலாவாதியாகிவிட்டால் தானாகவே அவருடைய நிரந்தரவாச உரிமை போய்விடும்.

அதைத் திரும்பப்பெற அவருக்கு ஒரு மாத கால அவகாசமே உண்டு.

மசோதாவுக்கான மாற்றங்களை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் இந்தக் கால அவகாசம் இனிமேல் ஆறு மாதமாக இருக்கும்.

நிரந்தரவாச உரிமை பற்றிய முடிவுகள் தொடர்பில் உள்துறை அமைச்சுக்கு விடுக்கப்படும் சட்டபூர்வமான முறையீட்டு உரிமையை அகற்றுவதும் உத்தேசிக்கப்பட்டு இருக்கும் மாற்றங்களில் ஒன்று.

நாடாளுமன்றம் இந்த மாற்றத்தை நிறைவேற்றினால், ஒருவரின் நிரந்தரவாச உரிமை ரத்தாகும்போது அதன் தொடர்பில் அமைச்சரிடம் அவர் இனிமேல் முறையிட முடியாது.

குறிப்புச் சொற்கள்