ரிடவ்ட் ரோடு பங்களாக்களை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்த விவகாரத்தின் தொடர்பில் சீர்திருத்தக் கட்சித் தலைவர் கென்னத் ஜெயரத்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுக்கு பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அந்த பங்களாக்களைச் சந்தை நிலவர விகிதத்தைவிடக் குறைவான கட்டணத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர் என்ற எண்ணத்தை, ஜூலை 27ஆம் தேதி ஃபேஸ்புக்கிலும் லிங்க்ட்இன் தளத்திலும் திரு ஜெயரத்தினம் வெளியிட்ட பதிவு ஏற்படுத்தியது.
இதனால், பொய்ச் செய்திக்கு எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ், சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டொங் உத்தரவு பிறப்பித்ததாக சட்ட அமைச்சு புதன்கிழமை இரவு தெரிவித்தது. திரு ஜெயரத்தினம் தமது பதிவுகள் இரண்டிலும் திருத்த அறிவிப்புகளைச் சேர்க்கவேண்டும்.
அண்மை வாரங்களில் திரு ஜெயரத்தினத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட இரண்டாவது பொஃப்மா உத்தரவு இது.
அவர் தனது “ரைஸ்போல் சிங்கப்பூர்” இணையத்தளத்தில் ஜூலை 2ஆம் தேதி வெளியிட்ட ஒரு செய்தியின் தொடர்பில் ஜூலை 16ஆம் தேதி பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சர்கள் இருவரும் செலுத்திய வாடகை நியாயமான சந்தை மதிப்பிலானது என்பதை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனின் மறுஆய்வு கண்டறிந்ததாக, சட்ட அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
“அமைச்சர்கள் ஏற்றிருந்த பதவியின் காரணமாக அவர்களுக்குச் சாதகமான வாடகை விகிதங்கள் கொடுக்கப்பட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்றும் அறிக்கை தெரிவித்தது.